சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். இன்று நடைபெறும் பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்.
ஜனாதிபதி வருகை
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) இந்த பருவத்தில் 32 பெண்கள் உள்பட 272 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். இதில் 20 வெளிநாட்டினரும் அடங்குவர். இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா ஓ.டி.ஏ. வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
சாகச நிகழ்ச்சிகள்
பயிற்சி நிறைவு விழாவுக்கு முன்னதாக ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ராணுவ வீரர்களின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் ஓ.டி.ஏ.வில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஓ.டி.ஏ. கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் பாபி மேத்யூஸ் தலைமை தாங்கினார். சாகச நிகழ்ச்சிகளை பார்க்க ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் வந்து இருந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குதிரையில் சவாரி செய்தபடி நெருப்பு வளையத்தை தாண்டுவது, குறிப்பிட்ட இலக்கை ஈட்டியால் குத்துவது, வாளால் வெட்டுவது உள்ளிட்ட சாகசங்களை ராணுவ வீரர்கள் செய்துகாட்டினர். பாராசூட்களில் ராணுவ வீரர்–வீராங்கனை பறந்து தேசிய கொடியை பறக்கவிட்டனர்.
மோட்டார் சைக்கிள் சாகசம்
15 ராணுவ வீரர்கள் உடலை வில்லாக வளைத்தபடி உயரம் தாண்டுதல், நெருப்பு வளையம் தாண்டுதல், குட்டிக்கரணம் அடித்தல் போன்ற ஜிம்னாஸ்டிக் சாகசங்களை செய்து காண்பித்தனர். மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட்கள் மூலம் ராணுவ வீரர்கள் வானில் வட்டமிட்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
சாகச நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சி முடிவில், சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஓ.டி.ஏ. கமாண்டன்ட் பரிசு வழங்கி பாராட்டினார்.
www.tnpgtakarurdt.in