கரூர்,
சமூக மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுகர்வோர் தின விழா
கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கரூர் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு தன்மையை உறுதிபடுத்தும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் நுகர்வோர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் நோக்கம் நுகர்வோர் பாதுகாப்பிற்காகத்தான் நடத்தப்படுகிறது. உணவு பொருட்கள் வாங்கும் போது சுகாதாரமானதாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். இன்றைய கால கட்டம் விளம்பர உலகமாக திகழ்கிறது. அதனால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மாணவர்கள்
அதேபோல, தற்போதைய உணவு பழக்கவழக்கங்கள் மாறுபட்டு வருகின்றன. பொதுமக்கள் தரமான, இயற்கையான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் வசதிக்காக தற்போது ரேஷன் கடைகளில் தரமான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி, புதிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். நம்மை உருவாக்கிய ஆசான்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில், கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்பட மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட வழங்கல் அதிகாரி அசோகன் வரவேற்றார். முடிவில தாசில்தார் ரஞ்சித் நன்றி கூறினார்.
www.tnpgtakarurdt.in