திருச்சி: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும்
இணைந்து, 10 வகையான தொழிற்
பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கால்நடை மற்றும் கோழியின அறிவியல் கல்வி மற்றும்
ஆராய்ச்சியின் முக்கியத்துவம் கருதி, உற்பத்தி
திறனை பெருக்கவும், விவசாயிகளின்
வருமானத்தை பெருக்கும் விதமாகவும், சென்னையில்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலை நிறுவப்பட்டது. இந்த பல்கலை சார்பில், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியிலும், நெல்லை, மதுரை,
நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை
மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும், 10 வகையான குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து வரும், 2016, மார்ச் மாதம் வரை மாதந்தோறும் நடத்தப்படும்,
பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம்,
திருச்சியில் நடந்த பல்கலை நிறுவன நாள்
விழா மற்றும் கால்நடை, கோழிப்பண்ணையாளர்கள்
தின விழாவில் வழங்கப்பட்டது.
கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொழிலுக்கு தேவையான
மனித வளத்தை, செயல் திறன்
கற்பித்தல் மற்றும் நேர்முக பயிற்சிகள் மூலம் நிவர்த்தி செய்வதே இத்திட்டத்தின்
நோக்கம். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள், உயர்கல்வி
தொடர முடியாதவர்கள், கால்நடை மற்றும்
கோழி வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள், சுய
தொழில் முனைவோர்கள், 30 நாட்கள் நடக்கும்
பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒரு பயிற்சி தொகுதியில், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்ற, 18 முதல், 45 வயதுக்கு
மிகாதவர்களை, 10 பேர் வீதம்
சேர்த்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள்,
பால் பதன நிலைய இயக்கம் மற்றும் மேலாண்மை,
மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரிப்பு
தொழில் நுட்பம், குஞ்சு பொரித்தல்
மேலாண்மை தொழில் நுட்பம், கோழிகளுக்கான தடுப்பூசி
அளிப்பவர், கால்நடைகளுக்கான
அடர் தீவனம் தயாரிப்பு தொழில்நுட்பம், கால்நடை
தீவன ஆலை இயக்கம் மற்றும் மேலாண்மை, சுத்தமான
முறையில் இறைச்சி தயாரிப்பு தொழில் நுட்பம், மதிப்பூட்டிய இறைச்சி பொருள்கள் தயாரிப்பு தொழில்
நுட்பம், கால்நடைகளுக்கான
தடுப்பூசி அளிப்பவர், கால்நடை மற்றும்
கோழிப்பண்ணைகளில் உயிர்பாதுகாப்பு தொழில் நுட்பம் ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி
பெறலாம்.
பயிற்சி சேர்க்கைக்கு, தாழ்த்தப்பட்ட
மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு, தமிழக அரசின் இட ஒதுக்கீடு முறை
கடைபிடிக்கப்படும். பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு, அதற்கான சான்று வழங்கப்படும். பயிற்சிக்கான
விண்ணப்பங்களை, தொலைநிலைக் கல்வி
இயக்குனர், தமிழ்நாடு கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அண்ணாசாலை, நந்தனம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.