தமிழகம் முழுவதும் வரும் 17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள்
நடைபெற உள்ளன. சென்னையில் மட்டும் 6 லட்சத்து 73 ஆயிரம் குழந்தைகளுக்கு
சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் 17-ம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை, முதல் தவணை போலியோ
சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. அதற்காக மாநகரம் முழுவதும் 1,570
மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பணியில் 6,300 பணியாளர்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள்,
சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில், பஸ் நிலையங்கள் ஆகிய
இடங்களில் முகாம்கள் நடைபெறும். மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி,
கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் நடமாடும் மையங்கள் செயல்படும். இந்த
முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட 6 லட்சத்து 73 ஆயிரம் குழந்தைகளுக்கு
சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு முறையாக கொடுக்கப்பட்டு இருந்தாலும்
17-ம் தேதி நடைபெறும் முகாமில் அவசியம் கொடுக்க வேண்டும். 2-வது தவணை
சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
www.tnpgtakarurdt.blogspot.in