Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, December 02, 2016

சென்னைப் பல்கலை. பேராசிரியருக்கே மீண்டும் துணைவேந்தர் பதவி? எம். மார்க் நெல்சன்

தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய்ப் பல்கலைக்கழகமாகத் திகழும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி, இந்த முறையும் அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கே கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
புதிய துணைவேந்தர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், பாரம்பரியமிக்க இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நடுநிலையோடு நடந்து கொள்ளக்கூடிய சிறந்த கல்வியாளரை நியமிக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பல்கலைக்கழகத்தின் 43-ஆவது துணைவேந்தராக இருந்த ஆர். தாண்டவனின் பதவிக் காலம் 17-1-2016 அன்றுடன் முடிவுக்கு வந்தது. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகு, அவருக்குத் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டது. பேராசிரியர் தாண்டவனின் துணைவேந்தர் பதவிக் காலம் முடிந்து 10 மாதங்களுக்கு மேலாகியும், பல்கலைக்கழகத்துக்கு இதுவரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.

பாதிப்புகள்: இவ்வாறு 10 மாதங்களுக்கு மேலாகத் துணைவேந்தர் இன்றி, உயர் கல்வித் துறைச் செயலர் தலைமையிலான மூன்று பேர் ஒருங்கிணைப்புக் குழு பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருவதால், பல்வேறு திட்டங்கள் முடங்கிப் போயிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டுமன்றி, இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் பேராசிரியர் அளவிலான கல்வியாளர்கள் இடம் பெறாத நிலையில், இவர்களைக் கொண்டு பட்டமளிப்பு விழா நடத்தி ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களுக்கும் பட்டச் சான்றிதழ்களில் உயர் கல்வித் துறைச் செயலரே கையெழுத்திட்டு வழங்குவதற்கு பெரும்பாலான பேராசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலைப் பட்ட மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களில் பிஎச்.டி. முடித்த கல்வியாளர் ஒருவர் கையெழுத்திடுவதுதான் பல்கலைக்கழகத்தின் மரபு. அவ்வாறின்றி, பட்டச் சான்றிதழ்களில் உயர் கல்வித் துறைச் செயலர் கையெழுத்திடுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னை காரணமாக, டிசம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட இருந்த பட்டமளிப்பு விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுபோல, பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் முடக்கம், நிதி கோப்புகள் தேக்கம் எனப் பல மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் பல்வேறு பணிகளும் முடங்கிக் கிடப்பதாக பேராசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.
தாமதம் ஏன்?: சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான மூன்று பேர் அடங்கிய தெரிவுக் குழு அமைக்கப்பட்டு பல மாதங்களான போதிலும், இவர்களுக்குள் கருத்தொற்றுமை இல்லாமல் இருந்ததே தாமதத்துக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பல்கலை. பேராசிரியருக்கே மீண்டும் வாய்ப்பு: இந்த நிலையில், இந்தத் தெரிவுக் குழு நவம்பர் முதல் வாரத்தில் ஒரு பட்டியலை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. அந்த 3 பேர் பெயர்ப் பட்டியலில், தெரிவுக் குழு உறுப்பினர்கள் மூவரின் ஒப்புதலும் இருப்பதால், இது இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, பல்கலைக்கழகத்துக்கு விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
மேலும், இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 3 பெயர்களில் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இருவரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
இவர்களில், முந்தைய துணைவேந்தர் தாண்டவனைப் போல, இதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது ஆட்சிக் குழு உறுப்பினராக இருப்பரவர்களில் ஒருவரே துணைவேந்தராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.