சென்னை பல்கலையில் துணைவேந்தர் இன்றி, பட்டமளிப்பு விழா நடத்தக்கூடாது’ என, தனியார் கல்லுாரி பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்கலையில், 10 மாதங்களாக காலியாக உள்ள, துணைவேந்தர் பணியிடம் இன்னும் நிரப்பப்படவில்லை. ஆனால், துணை வேந்தரை நியமிக்கும் முன், பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல், பட்ட சான்றிதழ் வழங்கப்பட உள்ளதால், எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, அரசு உதவி பெறும் தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கமான, ’ஆக்டா’வின் மாநில பொருளாளர், எம்.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
சென்னை பல்கலையின், 159வது பட்டமளிப்பு விழா, டிச.,1ல், நடைபெற உள்ளது. வழக்கமாக, பட்ட சான்றிதழில், துணைவேந்தர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் கையெழுத்து இருக்கும்.
இது, மாணவர்களின் தேர்ச்சியை, பல்கலை அங்கீகரிக்கும் செயல். ஆனால், முதன் முறையாக துணைவேந்தர் இன்றி, பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. இது, மாணவர்களிடையே, அச்சத்தை, சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சான்றிதழின் தகுதி குறித்தே சந்தேகங்கள் எழும்; மாணவர்களின் வேலை வாய்ப்பும், மேற்படிப்பும் பாதிக்கும்.எனவே, துணைவேந்தரை நியமித்த பிறகே, பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும்.
தமிழகத்தில், துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைகளில், உடனே துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.