மதுரை காமராஜ் பல்கலையில் நடந்த கல்வி பேரவை கூட்டத்தில், தொலைநிலைக் கல்வி பி.எட்., மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதால், ஊழல் கண்காணிப்பு துறை விசாரிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரவை உறுப்பினர்களின் விவாதம்:
முத்துசெழியன்:
பல்கலையின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலை நீடித்தால் அண்ணாமலை பல்கலை அளவுக்கு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். இணையவழி கல்வி கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கல்வி கட்டணங்கள் வசூல் செய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தொலைநிலைக் கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்ட பி.எட்., படிப்பில், 500 பேர் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால், விதிகளை மீறி 570 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 100 மாணவர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால், 20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த கணக்கு விவரங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஊழல் கண்காணிப்பு துறை விசாரிக்க வேண்டும். மாணவர்களின் சேர்க்கை குறித்த தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்.
ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பல்கலையில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கேன்டீன் இயங்குகிறது. ஆனால், கேன்டீன் நடத்துபவர்களுக்கு ஆண்டிற்கு 48 லட்சம் ரூபாய் பல்கலை சார்பில் வழங்கப்படுகிறது. கேன்டீன் நடத்தும் உரிமையை, அரசு சாரா நிறுவனங்கள், சுய உதவி குழுக்களுக்கு வழங்கினால் பல்கலையின் பணம் முழுமையாக சேமிக்கப்படும்.
சிண்டிகேட் உறுப்பினர் விஜயரங்கன்:
பி.எட்., படிப்பில் 570 பேர் சேர்க்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே கட்டண சலுகை வழங்கப்பட்டது. கேன்டீன் குறித்த குறைகளை களைய கமிட்டி அமைக்கப்படும்.
கண்ணன்:
பல்கலையின் நிதி ஆதாரம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு நடத்த வேண்டும். எதிர்காலத்தில், மத்திய மாநில அரசுகளின் நிதி உதவி கிடைக்காமல் போகலாம். அந்நிலையை சமாளிக்க பல்கலை தயாராக இருக்க வேண்டும்.
பி.எச்.டி., மாணவர்கள் தேவையற்ற துறைகள் மற்றும் வழிகாட்டியிடம் (கெய்டு), நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும்.
நேரு:
நிதி ஆதாரம் மோசமாக இருப்பதால், பல்கலை தொழிலாளர்களுக்கு &'பென்ஷன்&' கிடைக்காத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. விமான போக்குவரத்து மேலாண்மை (பி.பி.ஏ.,) படிப்பை துவக்கும் தகவலை கல்வி பேரவைக்கு தெரிவிக்கவில்லை. அதற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.
படித்து முடித்ததும் அது அங்கீகாரமற்ற படிப்பு என தெரிய வந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஒரு மாணவரிடம் இரண்டு முறை பட்டமளிப்பு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
சுவாமி கண்ணன்: விமானவியல் மேலாண்மை பாடத்திட்டத்தில் குறைபாடு உள்ளது.
விஜயரங்கன்: பல்கலையின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கலைச்செல்வன்: கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் பல்கலையின் ஆவணங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பல்கலை பதிவாளரை நிர்வாகத்திற்கு வெளியிலிருந்து சிலர் இயக்குகின்றனர்.
விஜயரங்கன்: பதிவாளரை வெளியாட்கள் யாரும் இயக்கவில்லை.
வாய் திறக்காத பதிவாளர்: கல்வி பேரவை கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், இறுதிவரை பதிவாளர் (பொ) விஜயன் வாய் திறக்கவில்லை.
அவரை வெளி ஆட்கள் இயக்குகிறார்கள் என உறுப்பினர்கள் கூறியபோதும், அமைதியாகவே இருந்தார். சிண்டிகேட் உறுப்பினர் விஜயரங்கன் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.