சமீபத்தில் ‘வாட்ஸ் அப்’ சமூக வலைத்தளத்தில் ஆசிரியர் பற்றி ஒரு தகவல் பரவலாக வெளிவந்தது. ‘‘ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி’’ என்பார்கள். அத்தகைய ஆசிரியரைப்பற்றி பரப்பப்பட்ட அந்த செய்தியின் தலைப்பு ‘ஆயிரம் கண்கள் உன்னை உன்னிப்பாக கவனிக்கிறது’. ஏனென்றால், ‘‘நீ ஒரு ஆசிரியர் என்பதால்தான். எதிர்கால சமுதாயத்தை தூக்கிநிறுத்த ஒருவரால் முடியும் என்றால் அது ஆசிரியர்தான் என்று தொடங்கிய ஒரு செய்தியில், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதைத்தான் ஆசிரியர்களிடம், பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் சமுதாயம் ஆசிரியர்களை போற்றுகிறது, வணங்குகிறது என்று தொடங்கி ஆசிரியர் பணியின் மேன்மைப்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில், இந்த உன்னதமான பணிக்கான கல்வி, பிளஸ்–2 முடித்தவுடன் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், பட்டப்படிப்பு முடித்தவுடன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்த ஆசிரியர்கள், 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்புவரை பாடம் எடுக்கக்கூடிய இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். அதற்குமேல் பி.எட். பட்டப்படிப்பு படித்தவர்கள், 10–ம் வகுப்புவரை பாடம் எடுப்பார்கள். முதுகலை படிப்புடன் பி.எட். படித்த ஆசிரியர்கள், பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்புகளுக்கு பாடம் எடுப்பார்கள். இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு உற்சாகம் வரவில்லை. இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காக, ஒருமுறைக்கு பதிலாக இருமுறை கவுன்சிலிங் வைத்தும், தேவையான மாணவர்கள் சேரவில்லை. இதே நிலைமைதான் பி.எட். பட்டப்படிப்பில் சேர்வதற்கும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள் 21 இருக்கின்றன. இதுதவிர, 701 சுயநிதி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள் இருக்கின்றன. இந்த ஆண்டு முதல், என்ஜினீயரிங் படிப்பு அதாவது பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு என்ஜினீயரிங் படித்துவிட்டு பி.எட். ஆசிரியர் பட்டப்படிப்பு படித்தவர்கள், பள்ளிக்கூடங்களில் கணக்கு, பவுதிகம், ரசாயனம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கான ஆசிரியர்களாக இருக்கலாம். பொதுவாகவே, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதில் தயக்கம்காட்டினாலும், இந்த புதிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் என்ஜினீயரிங் படித்த மாணவர்களும் சேரத்தயக்கம் காட்டுகிறார்கள். ஒதுக்கப்பட்ட 200 இடங்களுக்கு 150 மாணவர்கள்தான் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு ஆசிரியர் பயிற்சிப்படிப்புக்கு மாணவர்கள் சேராததற்கான காரணம் என்னவென்றால், ஆசிரியர் தேர்வுவாரியம் ஆசிரியர் பணிக்கு கடந்த ஒரு ஆண்டாக ஆள் எடுக்கவில்லை. மேலும், இந்த ஆண்டு கல்வி மானியக்கோரிக்கையிலும், எந்தவொரு அறிவிப்பும் இல்லை. அரசு பள்ளிக்கூடங்களிலும் 7 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பதால், இன்னும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று கசியும் ஒரு தகவல்தான், படித்துமுடித்துவிட்டு என்ன செய்யப்போகிறோம்?, வேலைகிடைக்காதே? என்ற ஒரு தயக்கத்தால்தான், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். இதைதவிர்க்க, ஆசிரியர் பயிற்சிமுடித்த ஆசிரியர்கள், சுயதொழிலாக அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே மழலை வகுப்புகள் தொடங்க போதிய கடன்வசதி அளித்து, இதுபோன்ற மழலை வகுப்புகள் தொடங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டு, அங்கீகாரம் அளித்தால், நிச்சயம் நிறையபேர் சேரமுன்வருவார்கள்.
அரசு உடனடியாக இதில் தீவிரகவனம் காட்டவேண்டும். இதுபோல, ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த இரண்டு ஆண்டாக நடக்கவில்லை. எனவே, உடனடியாக ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்குவதில் அரசு தீவிர கவனம்செலுத்தவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள 37 ஆயிரத்து 201 அரசு பள்ளிக்கூடங்களிலும், 8,402 அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் தமிழ், ஆங்கிலம் வழிப்பாடங்களாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படவேண்டும். ஆசிரியர்கள் தகுதித்தேர்வும் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும்.
www.tnpgtakarurdt.in