Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, August 29, 2016

மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமை !


தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.போதைக்கு அடிமையாவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, வழிகாட்டுதல் இன்றித் தத்தளிக்கும் சிலஅரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் உள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் நாமக்கல், கடலூர், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வகுப்பறையிலும் பொதுஇடங்களிலும் மாணவர்கள் மட்டுமல்லாது, மாணவிகளும் மது போதையில் மயங்கிக் கிடந்தனர்.இந்த மாணவர்களின் செயல்கள் வெளியில் தெரிந்ததால், அடையாளம் காணப்பட்டனர். ஆனால், வெளியில் தெரியாமல் போதைக்கு அடிமையான மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.அரசுப் பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் எத்தனை மாணவர்களுக்கு மது, புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பது அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தெரியும். ஆனால், இத்தகைய மாணவர்களின் செயல்களை ஆசிரியர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.இதுகுறித்து மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்த மாணவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:இப்போது நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களில் 5 முதல் 7 சதவீதம் பேருக்கு மது மற்றும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. இதைத் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிலையை விளக்கும் புள்ளிவிவரம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.தனியார் பள்ளிகள் அனைத்திலும் மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஒருசில தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மது மற்றும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.
இப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க 3 மாவட்டங்களுக்கு ஓர் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரால் பெரும்பாலான பள்ளிகளுக்குச் செல்ல முடிவதில்லை.இதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் உளவியல் ஆலோசகரை நியமித்து, மாணவர்களுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்குவதோடு, மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை படக் காட்சிகள் மூலம் விளக்க வேண்டும் என்றார் அவர்.