பழவேற்காடு:பழவேற்காடு மீனவ பகுதியில் உள்ள,
கிளை நுாலகத்தில், இணையதள சேவை மையம்,
குடிமை பயிற்சி பிரிவுகளுக்கு அறைகள்
ஒதுக்கப்பட்டும், கணினி, புத்தகங்கள் இல்லாததால்,
மாணவர்களும், அரசு தேர்வு எழுதுபவர்களும்
ஏமாற்றமடைந்து உள்ளனர்.
பழவேற்காட்டில் உள்ள, கிளை நுாலகம், 1966ல்
துவங்கப்பட்டது. அங்கு, சிறுகதை, நாவல், வரலாறு,
அறிவியல் என, 35 ஆயிரத்திற்கும் அதிகமான
புத்தகங்கள் உள்ளன. 200 பேர் உறுப்பினர்களாக
உள்ளனர்.கடந்த, 2008ல், நுாலகத்தின் கட்டடம்
விரிவுபடுத்தப்பட்டபோது, குடிமை பயிற்சி பிரிவு,
கணினி பிரிவு, குறிப்பெடுப்பு கூடம் ஆகியவற்றிற்கு
அறைகள் ஒதுக்கப்பட்டன.
அறைகள் ஒதுக்கி, எட்டு ஆண்டுகள் ஆன நிலையில்,
இதுவரை கணினிகள் அமைக்கப்படவில்லை. குடிமை
பிரிவில் புத்தகங்களும் வைக்கப்படவில்லை.
இதனால், பள்ளி, கல்லுாரி
மாணவர்களும், அரசுப் பணிகளுக்கு தேர்வு
எழுதுபவர்களும் ஏமாற்றமடைந்து
உள்ளனர். மேலும், கணினி, குடிமை பயிற்சி
ஆகியவற்றின் அறைகள் பயனற்றுள்ளதால், வாசகர்கள்
அதிருப்தியடைந்துள்ளனர்.
புத்தகங்கள் தேடி...நுால்கள் அடுக்கி வைப்பதற்கு
தேவையான இரும்பு அடுக்குகள் இல்லாததால்,
புத்தகங்கள் ஆங்காங்கே மொத்தமாக வைக்கப்பட்டு
உள்ளன. இதனால், புத்தகங்களை தேடுவதில் வாசகர்கள்
சிரமப்படுகின்றனர்.மீனவப் பகுதியை சேர்ந்த
மாணவர்கள், அரசு பணிக்கு தயாராகும் இளைய
தலைமுறையினரின் நலன் கருதி, அந்த நுாலகத்திற்கு,
சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, கணினி, குடிமை பயிற்சி
புத்தகங்களை கொண்டுவந்து பயன்பாட்டில் வைக்க
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
கோரிக்கைகள் எழுந்துள்ளன.தாலுகா அளவில்...நுாலக
துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாலுகா அளவிலான நுாலகங்களுக்கு மட்டும் தான்,
இணையதள சேவை மையத்திற்கு, நிதி ஒதுக்கீடு
செய்யப்படுகிறது. கிளை நுாலகங்களில், தன்னார்வலர்,
நன்கொடையாளர்கள் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.
அப்படி, தனியார் பங்களிப்பில் இணையதள மையம்
அமைக்கும்
போது, தற்காலிக பணியாளர் நியமிக்கப்படுவர்.
குடிமையியல் பயிற்சி புத்தகங்கள் கொண்டுவர
நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் வட்ட துணை தலைவர் செந்தில்குமார்
கூறியதாவது:நுாலக துறை அதிகாரிகளை அணுகி மனு
கொடுத்தோம். நிதி இல்லை, வாசகர் வட்டத்தின் மூலம்,
கணினி அமைத்து கொள்ளும்படி கூறினர். இணையதள
சேவை மையம் இருந்தால், பள்ளி, கல்லுாரி
மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்டு
உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுதி வருகிறேன்.
அதற்கு தேவையான புத்தகங்கள் கிடைக்கவில்லை.
சென்னையில் உள்ள நண்பர்கள் மூலம், புத்தகங்களை
இரவல் பெற்று படித்து வருகிறேன். பழவேற்காடு
பகுதியில் இணையதள மையங்கள் இல்லை. அதனால்
ஆன்லைன் மூலம், அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க,
பொன்னேரி செல்ல வேண்டி உள்ளது.
ஏ.முரளி, பொறியியல் பட்டதாரி, இஸ்ரவேல்குப்பம்.
அரசு கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு கணினி
அறிவியல் படிக்கிறேன். வீட்டில் கணினி வசதியில்லை.
பாடம் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு,
பொன்னேரியில் உள்ள இணையதள மையங்களுக்கு
செல்ல வேண்டி உள்ளது. நுாலகத்தில் இணையதள
வசதியுடன் கணினி இருந்தால், என்னை போன்ற ஏழை
மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எஸ்.ராஜேஸ்வரி, இடமணிகுப்பம், பழவேற்காடு