தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகம் வருகிற 2016-17 கல்வியாண்டில் 7 புதிய
பட்டயப் படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல
ஆராய்ச்சி மையத்தில் இந்த ஓராண்டு படிப்புகள்
வழங்கப்பட உள்ளன என பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் திலகர் கூறினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு
விழாவையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,
துணைவேந்தர் திலகர் அளித்த பேட்டி:
7 புதிய படிப்புகள்: பல்கலைக்கழகம் வருகிற
கல்வியாண்டில் கால்நடை தீவன உற்பத்தி, கறி மற்றும்
மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தி, வான்கோழி
வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, கறவைமாடு வளர்ப்பு,
வெண்பன்றி வளர்ப்பு, கால்நடை செவிலிய உதவியாளர்
படிப்பு என 7 புதிய பட்டயப் படிப்புகளை அறிமுகம்
செய்ய உள்ளது.
ஓராண்டு கொண்ட இந்த படிப்புகள் புதுக்கோட்டையில்
உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி மையத்தில்
வழங்கப்படும். இந்தப் படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பு,
பிளஸ்-2 தேர்ச்சி கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படும்.
ரூ.12.5 கோடியில் ஆய்வகம்: தமிழக அரசு ஏற்கெனவே
அறிவித்ததன் அடிப்படையில் முதல் கட்டமாக ரூ. 6.34
கோடியில் 10 நடமாடும் கால்நடை மருத்துவ
ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன.
அவை திருச்சி, தஞ்சை, மதுரை, நாமக்கல், காஞ்சிபுரம்
மாவட்டங்களில் தலா 2 வீதம் பயன்பாட்டுக்கு விடப்படும்.
இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள்
பயன்பெற முடியும். படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும்
இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கால்நடை ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு
செல்லும் வகையில் ரூ. 12.5 கோடியில் உயிரி பாதுகாப்பு
ஆய்வகம் மாதவரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின்
வளாகத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது
என்றார் அவர்.