கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கருவி எனலாம்.
இன்று பெரும்பாலானோர் கல்வி மூலமே மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி என்பது மிக எளிதாகவும், இயல்பானதாகவும் இருந்தது.
கல்வித்துறையில் தனியார்மயம் சட்டம் இயற்றிய பின்பு இன்று கல்வி என்பது எட்டாத உயரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விட்டது.
இன்று ஒவ்வொருவரும் படிப்புச்செலவுக்கே தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அரசு பள்ளிகள் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மையமாக செயல்படும் நிலையை ஒவ்வொரு அரசும் திட்டமிட்டே செய்து வருகிறது.
திறமையான ஆசிரியர்களும், திறமையான மாணவர்களும் இருந்தாலும் பள்ளிக்கூடத்தின் சூழல் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளுக்கு உகந்ததாக இல்லை.
தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக இன்று அரசு பள்ளிகளையும் ஞாயிற்றுக்கிழமைகூட செயல்படச்சொல்லி கல்வித்துறை அதிகாரிகள் நிர்பந்தித்து பெரும்பாலான பள்ளிகளில் 10, 12 வகுப்பு பயிலும் மாணவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள்.
இந்த ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் இப்படி படித்துத்தான் இந்த நிலைக்கு வந்தார்களா?
இன்றைய கல்விச்சூழல் மதிப்பெண் மட்டும்தான் வாழ்க்கை என்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி தனியார் கல்விகூட முதலாளிகள் கோடிக்கணக்கில் கல்வியை வியாபார நிறுவனங்களாக மாற்றி வருகின்றனர்.
தனியார் கல்விக்கொள்ளையர்கள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டும் சேர்த்துக்கொண்டு இரண்டு ஆண்டுகளும் ஒரே வகுப்பு பாடத்தை நடத்தி அடிப்பபடை விஷயங்கள்கூட தெரியவிடாமல் மதிப்பெண்ணை மட்டும் உற்பத்தி செய்யும் இயந்திரமாக மாற்றி சீரழித்து வெளியே அனுப்புகின்றனர்.
10% மாணவர்கள் இந்தச்சூழலை சமாளித்து எப்படியோ வாழ்க்கையில் நல்ல உயர்வான நிலையை அடைந்து விடுகிறார்கள். இவர்கள் எந்தப்பள்ளிக்கூடத்தில் படித்தாலும் இந்த நிலைக்கு வந்துவிடுவார்கள். மீதமுள்ள 90% மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இதுதான் எதார்த்த நிலை.
அப்படியானால் ஏன் கல்வி என்ற பெயரில் இவ்வளவு கலவரம்.
அரசுப்பள்ளிகளில் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகள் மட்டும் நடக்கும்படியான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள் எவ்வித சிறப்பு வகுப்புகளும் எடுக்காமலே எளிமையாக உயர்ந்த மதிப்பெண் பெற்றதோடு மட்டுமில்லாமல் சமுதாயத்தோடு இணைந்து வாழக்கூடிய 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இயல்பான நிலை மாணவர்களை மீண்டும் காணச்செய்கிறோம்.
கற்றல் - கற்பித்தல் என்பது மூச்சு விடுவது போன்றே மிகவும் இயல்பானது, இனிமையானதும்கூட.
மூ. மகேந்திரன்,
முதுகலை வணிகவியல் ஆசிரியர்,
வாங்கல், கரூர்.