"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' சார்பில் "நாளைய இந்தியப்
பள்ளிகள்' என்ற தலைப்பில் கல்வி மாநாடு, சென்னை
கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் வரும்
செவ்வாய், புதன்கிழமை (பிப்.9,10) நடைபெறுகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் "இந்தியாவின்
கல்விப்புரட்சி கிராமங்களில் ஒளிந்திருக்கிறதா?' என்ற
தலைப்பில் நடைபெறும் குழு விவாதத்திற்கு தினமணி
ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார்.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' சார்பில் ஆண்டுதோறும்
கல்வி மாநாடு நடத்தப்படுகிறது. இதில், பிரபல
கல்வியாளர்கள் பங்கேற்கும் கல்வி சார்ந்த பல்வேறு
தலைப்புகளில் குழு விவாதங்கள், கருத்தரங்குகள்
இடம்பெறுகின்றன.
அதன்படி இந்த ஆண்டு, "நாளைய இந்தியப் பள்ளிகள்'
என்ற தலைப்பில் இக்கல்வி மாநாடு நடத்தப்படுகிறது.
இதில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ
ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
குழு விவாதம்: இரண்டாம் நாள் அமர்வில், தினமணி
ஆசிரியர்
கே. வைத்தியநாதன் தலைமையில், "இந்தியாவின்
கல்விப்புரட்சி கிராமங்களில் ஒளிந்திருக்கிறதா?' என்ற
தலைப்பில் குழு விவாதம் நடைபெறுகிறது. இதில்
குஜராத் அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஜெயந்தி
ரவி, திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராம
பஞ்சாயத்து தலைவர் ரங்கசுவாமி இளங்கோ, சாஸ்த்ரா
பல்கலைக்கழக டீன் எஸ்.வைத்யசுப்ரமணியம் ஆகியோர்
பங்கேற்கின்றனர். விவாதத்தின் இறுதியில்
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விவாதத்தில்
பங்கேற்பவர்கள் பதில் அளிப்பார்கள்.