புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை மூலம், 22-வது சர்வதேச யோகா திருவிழா
ஜனவரி 4 முதல் 7 வரை புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்களுக்கு
தனித்தனியாக 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு
நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர்.
புதுச்சேரியில் நடக்கும் சர்வதேச யோகா திருவிழாவில் தொடர்ந்து கரூர்
விவேகானந்தா யோகா பயிற்சி மையம் பங்கேற்று வருகிறது. இந்த மையம் மூலம்
நடப்பாண்டு 10-15 வயது பிரிவில் பங்கேற்ற கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி
மாணவி எஸ்.ப்ரியதர்ஷினி(14), பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம்
வென்றுள்ளார். இவர் ஏற்கெனவே இப்போட்டியில் 3 முறை பங்கேற்று அதில் இரு
முறை 3-ம் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை பங்கேற்ற கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த எஸ்.ப்ரியதர்ஷினி கரூர்
மணவாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது
தந்தை எஸ்.சிவசாமி மின் வாரியத்தில் போர்மேனாக உள்ளார்.
விவேகானந்தா யோகா பயிற்சி மையத்தில் கரூர் மாவட்ட யோகா சங்கத் தலைவர்
சேதுகுமார் தலைமையில் நேற்று முன்தினம் மாணவி ப்ரியதர்ஷினிக்கு பாராட்டு
விழா நடைபெற்றது.
www.tnpgtakarurdt.blogspot.in