போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை
(ஜன. 17) நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம்
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7
முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் செயல்படும்.
இரண்டாவது தவணை முகாம் பிப்ரவரி 22-இல்
நடைபெறுகிறது.
இதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு
மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு
மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் 43,051
மையங்களும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள்,
விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1,652
நடமாடும் மையங்களும் நிறுவப்படும். இடம் பெயர்ந்து
வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம்களில்
சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்தப் பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப்
பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள்,
தன்னார்வலர்கள் ஈடுபடுவர்.
சென்னையில்..: சென்னையில் மருத்துவமனைகள்,
பள்ளிகள், சத்துணவு மையங்கள், ரயில், பேருந்து
நிலையங்கள் ஆகிய இடங்களிலும், மெரீனா கடற்கரை,
சுற்றுலா பொருள்காட்சி, கோயம்பேடு பேருந்து நிலையம்
உள்ளிட்ட இடங்களில் நடமாடும் மையங்களும் என 1,570
மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 6 லட்சத்து 73 ஆயிரம்
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 6,300 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.