விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளியை
முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை
போலீசார் கைது செய்தனர்.
சிறப்பு வகுப்பு
மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான நேற்று
அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் அரசு
அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நேற்று மூடப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-
மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி
சிறப்பு வகுப்பு நடத்துவதாக தகவல் கிடைத்தது.
திருச்சி மேலப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் புனித
அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவிகளுக்கு
நேற்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்காக
ஏராளமான மாணவிகள் பள்ளிக்கு வந்து இருந்தனர்.
நேற்று காலை 10.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கி
நடந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வீர
விவேகானந்தர் இளைஞர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள்
திரண்டு வந்தனர். திருவள்ளுவர் தினத்தில் பள்ளியில்
சிறப்பு வகுப்பினை எப்படி நடத்தலாம் என திடீர்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 பேர் கைது
இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார்
அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடனும், பள்ளி
நிர்வாகத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதையடுத்து போராட்டம் நடத்திய மாநில தலைவர்
ரஞ்சித்குமார் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டம் எதிரொலியாக சிறப்பு வகுப்பு
பாதியிலேயே நிறுத்தப்பட்டு மாணவிகள் அனைவரும்
வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில்
சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.