தைவான் பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சி
பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதை அடுத்து,
அக்கட்சித் தலைவர், டிசய் இங் - வென், 59, புதிய
அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம்,
தைவானின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை,
இவர் பெறுவார்.
தைவானில், 113 பார்லிமென்ட் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல், நேற்று
முன்தினம் நடைபெற்றது. நேற்று ஓட்டுகள்
எண்ணப்பட்டன. இதில், எதிர்க்கட்சியான, ஜனநாயக
முற்போக்கு கட்சி, 60 சதவீத இடங்களைக் கைப்பற்றி,
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை
பெற்றது.இதையடுத்து, அக்கட்சித் தலைவர், டிசய் இங்
- வென், புதிய அதிபராக பொறுப்பேற்பார் என,
அறிவிக்கப்பட்டுள்ளது. சீன ஆதரவு, பணவீக்கம் போன்ற
காரணங்களால், குமிங்டங் தேசிய கட்சி, ஆட்சியை
இழந்துள்ளது.