்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு வருவாய்
கோட்ட அலுவலகங்களில், ஒரு சர்வேயர் கூட பணியில்
இல்லாததால், ஆதிதிராவிடர் மக்களுக்கு, இலவச வீட்டு
மனை பட்டா, சுடுகாட்டு சாலை வசதி போன்ற நலத்
திட்டங்கள் வழங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி,
பொன்னேரி மற்றும் அம்பத்துார் ஆகிய நான்கு வருவாய்
கோட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு,
ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகமும் இயங்கி
வருகிறது.
நலத் திட்ட உதவிகள்:இவ்வலுவலகங்கள் மூலம், 12
தாலுகாக்களில் உள்ள, ஆதிதிராவிடர்கள் மற்றும்
பழங்குடியினர் தங்களுக்குத் தேவையான, இலவச
வீட்டுமனை பட்டா, நலவாரிய உறுப்பினர்கள் அடையாள
அட்டை மற்றும் தையல் இயந்திரம், சலவை பெட்டி
போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக, தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர்) இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.
தாசில்தார் இலவச வீட்டுமனை வழங்குவதற்கு தனியார்
நிலத்தை கையகப்படுத்தி, அதை சர்வேயர் மூலம்
அளந்து, தனித்தனியாக தேர்ந்தெடுக்கப்பட்ட
பயனாளிகளுக்கு, இலவச பட்டா வழங்குவார்.
மேலும் ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு, சொந்த
கட்டடம் கட்டும் இடம் தேர்வு செய்து கொடுப்பது
போன்ற பல்வேறு பணிகளை சர்வேயர்கள் செய்ய
வேண்டி உள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள
மூன்று - நான்கு வருவாய் கோட்ட
அலுவலகங்களிலும், தலா, ஒரு சர்வேயர் என, மொத்தம்,
நான்கு பேர் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், நான்கு கோடட்டங்களில், மூன்று
சர்வேயர் பணியிடங்கள் காலியாகின. திருத்தணி
கோட்டத்தில், ஒருவர் மட்டுமே, நான்கு வருவாய்
கோட்ட பணிகளையும் கவனித்து வந்தார்.
பணி சுமை:இவரே மாவட்டத்தில் உள்ள, 12
தாலுகாக்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு
இலவச வீட்டு மனைகளை அளந்து பட்டா வழங்க
வேண்டிய அவலநிலை உள்ளது. ஒரே சர்வேயர்
பணிபுரிவதால், குறித்த நேரத்திற்கு அந்தந்த
தாலுகாவிற்கு சென்று, நிலத்தை பார்வையிட்டு அளக்க
முடிவதில்லை.இந்த பணி சுமையால், அவரும், மூன்று
மாதத்திற்கு முன், பணிமாற்றம் செய்து கொண்டு,
சென்னைக்கு சென்று விட்டார். இதன் காரணமாக,
மூன்று மாதங்களாக ஒரு சர்வேயர் கூட இல்லாததால்,
பல தாலுகாக்களில் நிலம் கையகப்படுத்தியும் நிலத்தை
அளந்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு, இலவச
வீட்டுமனை வழங்க முடியாமல் காலதாமதம் ஆகிறது.
இதுகுறித்து, பெயர் வெளியிடாத விரும்பாத தாசில்தார்
ஒருவர் கூறுகையில், ''ஆதிதிராவிடர் நலத்துறை
அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக
உள்ளன. மாவட்டத்தில் உள்ள நான்கு, கோட்டாட்சியர்
அலுவலகங்களிலும், தலா, ஒரு சர்வேயர் என, நான்கு
பேர் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு
சர்வேயர் கூட இல்லை. காலியாக உள்ள பணியிடங்கள்
குறித்த விவரமும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி
உள்ளோம்,'' என்றார்.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் துறை அலுவலர்
ஒருவர் கூறுகையில், 'உடனடியாக விசாரணை நடத்தி,
சர்வேயர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்றார்.-