கோவை:
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மத்திய அரசின்
போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, வெற்றி பெறும்
வகையில், பிரத்யேக கணினி
பயிற்சி கூடம், உப்பிலிபாளையம்,
தேசிய பார்வையற்றோர்
இணைய வளாகத்தில் துவங்கப்பட்டது.
மத்திய
அரசின் வேலை வாய்ப்பு அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு,
மூன்று சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இது,
நீண்டகாலமாக ஒதுக்கப்படாமல் இருந்ததால்,
மாற்றுத்திறனாளிகள் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. கோர்ட்
உத்தரவின்படி, 2008ம் ஆண்டு முதல்,
தற்போது வரை, நிரப்பாமல் இருக்கும், 14 ஆயிரத்து 267 இடங்களுக்கு, போட்டித்தேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில், 4 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட இடங்கள், பார்வையற்ற
மாற்றுத்திறனாளிகளுக்கானது.
இந்த
பணியிடங்களை நிரப்பும் விதமாக, தேசிய
பார்வையற்றோர் இணையம் மற்றும் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின்
சார்பில், பார்வையற்ற
மாற்றுத்திறனாளிகளுக்கான, பிரத்யேக கணினி
பயிற்சி கூடம் துவங்கப்பட்டுள்ளது. இந்த
பயிற்சி கூடத்தில், மூன்று கணினிகள்,
பார்வையற்றோர் படிப்பதற்காக
வைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பாடப்பகுதிகளில், கருத்துகளை கேட்டறியும் வகையில், சாதனங்கள் உள்ளன.
இம்மையத்தில்
தற்போது, கோவை உள்ளிட்ட மற்ற
மாவட்டங்களில் இருந்து, 35 பேர் பயிற்சி
பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. தேசிய
பார்வையற்றோர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் கூறுகையில், நீண்டகால போராட்டம், சுப்ரீம் கோர்ட் உத்தரவால், அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்வையற்ற
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொண்டு, வேலை
வாய்ப்பு பெற, இலவச பயிற்சி
வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
பொது
அறிவு, ஆங்கிலம், கணித பாடப்பகுதிகள், திறன் மேம்பாட்டு வகுப்புகளும் நடக்கின்றன. அக்.,
31 வரை வகுப்பு நடக்கிறது. பயிற்சி வகுப்பில்
சேர விரும்பும், பார்வையற்ற
மாற்றுத்திறனாளிகள், 89030 01608 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம், என்றார்.