Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 09, 2015

அசத்திய அரசுபள்ளி மாணவ,மாணவிகள்-ஆசிரியர். கார்த்திகேயன்


"நம்மால் வேண்டாமென்று
புறக்கணிக்கப்படும் ஆடைதான் வேறுயரோ ஒருவரால் விரும்பி
தேர்ந்தெடுக்கப்படுகிறது". 

           - இந்த வரிகள் 100% அரசுபள்ளிகளுக்குப்
பொருந்தும். தனியார் பள்ளிகளால் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட
மாணவ,மாணவிகளுக்குப் புகலிடம் கொடுத்து, ஊக்கமளித்து,  அவர்களின்
தாழ்வுமனப்பான்மையை வேரறுத்து,ஒதுக்கிய தனியார் பள்ளிகளுக்கே சவால்
விடும் திறமை அரசுபள்ளிகளுக்கே உண்டு.
அந்தவகையில் அரசுபள்ளியில் பயின்று
அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவ,மாணவிகள் பாராட்டப்பட
வேண்டும்;அவர்களின் சாதனையை உலகறிய செய்யவேண்டும்; அரசுபள்ளிகளையும்,
ஆசிரியர்களையும் உதாசினப்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே இந்த
பதிவின் நோக்கம்...!


வாருங்கள் இந்த ஆண்டின் அரசுபள்ளியின் சாதனையாளர்கள் சிலரை சந்திப்போம்,..


கிருத்திகா, அமேநிப,குளித்தலை,கரூர்(1166/1200)

தமிழரசி,அமேநிப, அரியலூர்

சங்கர், ஏற்காடு, சேலம்

-இந்த மூவரும் படித்தது வேறுவேறு பள்ளிகள்;வேறுவேறு மாவட்டங்கள்.ஆனால்
இந்த மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. துவண்டு வரும் வேளையில்
தட்டிக்கொடுக்க தந்தை இல்லை. அம்மாவின் கூலி வேலை தந்த அரை
வயிற்றுக்கஞ்சியை குடித்து, வறுமையின் பிடியில் சிக்கியிருந்தாலும்
அரசுபள்ளி ஆசிரியர்கள் தந்த ஊக்குவிப்பால் இன்று உயர்ந்துள்ளார்கள்..!!!


பெரியசாமி,அஆமேநிப,வாங்கல்,கரூர்.

             -உடல்நலம் சரியில்லாத காரணத்தால் படிப்பை பாதியில் விட்ட நிலையிலிருந்து
மீண்டு வந்து,செயற்கைகால் உதவியுடன் படித்து, சாதனைச்சிகரத்தை(982/1200)
தொட்டுள்ள இந்த நம்பிக்கை மின்னலை நாம் பாராட்டியாக வேண்டும்..!!!

சர்மிளா அபெமேநிப, குளித்தலை,கரூர்.
பிரதாப் ,நந்தினி அமேநிப,தென்னிலை கரூர்.

-கூலித்தொழிலாளியின் வியர்வைக்கு விளைச்சலாக கிடைத்தவர்கள்
இவர்கள்.சர்மிளாவின் அப்பா கூலி வேலை;அம்மா கோலமாவு தயாரித்து
தெருதெருவாய் விற்கும் வேலை. பிரதாப் அம்மா கூலி வேலை.
நந்தினி யாராலும் கண்டுகொள்ளப்படாத அருந்ததியர் சமுதாயத்திலிருந்து
பிறந்திட்ட 'புது விடியல்'..!!!

ஷேக்பரீத் அமேநிப, ஈசநத்தம்,கரூர்.

பத்தாம்வகுப்பு கணிதத்தில் 44 மதிப்பெண்கள். படித்த பள்ளியில் மேல்நிலை
வகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்ட மாணவன். இன்று + 2 பொதுத்தேர்வில்
வணிகவியலில் 199  மற்றும் கணக்குப்பதிவியலில் 199,!!


  இவர்களைப்போல் ஆயிரக்கணக்கான மாணவ
மாணவிகளை அரசுபள்ளிகள் விதைகளாக வித்திட்டு, பதியமிட்டு, பார்த்து பார்த்து,
வளர்த்து, தன்னம்பிக்கை எனும் நீரை ஊற்றி, வெற்றி விருட்சம்  பெறச்செய்து
வருகின்றன..
தனியார் பள்ளிகளின் மோகத்தில் திளைக்கும் சமுதாயத்திற்கு இது
தெரியாமல் கடலில் போட்ட கல்லாக பயனற்றே போகின்றது,
அதை அடையாளப்படுத்திக்காட்டுவதற்கான முயற்சி இந்த பதிவு.


அரசுபள்ளியில் சாதித்த அனைத்து மாணவ,மாணவிகளுக்கும், அவர்களை ஊக்குவித்து
சாதனை புரிய வைத்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்
பாராட்டுக்கள்...!!!

அரசுபள்ளியை நம்பினோர் கெடுவதில்லை...!!!

- வாழ்த்துகளுடன்
ஆசிரியர். கார்த்திகேயன், கரூர்.