தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தமிழக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வருகிறது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மக்கக்கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய பாலி ப்ரொபிலின் பைகளுக்கும் சேர்த்து தமிழக அரசு தடை விதித்துள்ளதாகவும், அவ்வகை பைகள் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்த மனுவில், பிளாஸ்டிக் மேலாண்மை சட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்வதற்கோ அல்லது ஒழுங்குபடுத்துவதற்கோ மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், மத்திய அரசின் அதிகாரங்களில் தமிழக அரசு தலையிடுவதாகவும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தற்போதைய நிலையில் பிளாஸ்டிக் தடை தொடர்பான தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது எனவும், தமிழக அரசின் விளக்கத்தையும், மத்திய அரசின் விளக்கத்தையும் கேட்டபிறகுதான் தடை விதிக்க முடியும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.