பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து சில சமூக விரோத கும்பல், போதை பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லையில் சிறுவர்களுக்கு ஃபெவிகால் விற்கக் கூடாது என வியாபாரிகள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே எஸ்.ஆர். 998 ஃபெவிகால் போதை பொருளாக மாறியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது. அதைத் தடுக்க வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை தடுக்க 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஃபெவிகால் விற்கக் கூடாது என வியாபாரிகள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஃபெவிகால் மட்டுமல்லாமல் ஃபெவிபாண்ட் உள்ளிட்டவைகளையும் போதைக்காகப் பயன்படுத்துகின்றனர். ஃபெவிகால் அல்லது ஃபெவிபாண்டை வாட்டர் பாக்கெட்களில் ஊற்றி அதை சுவாசிக்கும்போது போதை ஏற்படுவதால் மாணவர்கள் அதற்கு அடிமையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.