திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு இசைக்கப்படும் தேசியகீதத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பொருத்தமான சிந்தனை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை விரைவில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் அச்சமயத்தில் அங்குள்ளவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தேசபக்தி வளர்க்க இது உதவுமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இது குறித்து என்ன கருதுகிறது? என்ற கேள்விக்கு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் அதிகாரப்பூர்வ வார ஏடான `பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழ் ஆசிரியரான பிரகாஷ் காரத் கூறிய பதிலில், திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும் எனவும் அச்சமயத்தில் பார்வையாளர்கள் அனைவரும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும்வகையில் எழுந்து நிற்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் ‘நாட்டின் குடிமக்கள் அனைவரும் இந்த தேசத்தில் வாழ்கிறோம் என்பதை உணர வேண்டும். தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த அனைவரும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
தேசிய கீதம் என்பது அரசியல் சட்டம் முன்வைக்கும் தேசபக்தியின் அடையாளம். தேசபக்தி என்பது பிரிக்கமுடியாமல் இதில்(தேசிய கீதத்தில்) அடங்கியுள்ளது. இவற்றை குடிமக்கள் உணரவேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று கூறியுள்ளது. நீதித்துறையால் திணிக்கப்பட்டிருக்கும் இந்த தேசபக்தி தொடர்பான பரீட்சை முற்றிலும் தேவையற்றது. இது எவ்வித பொருத்தமான காரண காரியத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. தேசிய கீதத்திற்கு அல்லது தேசியக்கொடிக்கு மரியாதை என்பதை இத்தகைய பொருத்தமற்ற உத்தரவுகளின் மூலம் உருவாக்க முடியாது.
குடிமக்களின் மனத்தில் ஜனநாயக உணர்வுகளையும் மதச்சார்பின்மை மதிப்புகளையும் உருவாக்குவதன் மூலமே தேசபக்தியை வெளிப்படுத்தும் அடையாளங்கள் மீது மரியாதையையும் மதிப்பையும் விளைவிக்க முடியும். திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனும் இந்த முடிவு நீதிபகுப்பாய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
மக்கள் தமது ஓய்வை கழிக்கவும் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும் திரையரங்கிற்கு செல்கின்றனர். ‘பி’ கிரேடு தரமுள்ள ஒரு ஹாலிவுட் அல்லது பாலிவுட் திரைப்படத்தை பார்க்க செல்லும் மக்களின் மீது தேசபக்தி பற்றிய பரீட்சையை திணிப்பது என்பது குடிமக்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளில் ‘அரசியல் சட்டத்தின் தேசபக்தியை’ கலக்கும் கேலிக்கூத்தான நடவடிக்கை ஆகும். நீதிமன்றத்தின் இந்த ஆணையை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்பது கூறப்படவில்லை.
ஆனால், இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி மக்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்பதையும் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் நாம் அறிவோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் திரைப்படம் முடிந்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பொழுது எழுந்து நிற்காத சிலர் மீது ‘தேசதுரோக வழக்கு’ சுமத்தப்பட்டது. இப்பொழுது மோடி அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை பயன்படுத்தி ‘தேசபக்தி பரீட்சை’யை முழுவீச்சில் அமலாக்க முயற்சிகள் நடக்கும். எனவே, நியாயமான மற்றும் பொருத்தமான சிந்தனை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை விரைவில் மறுபரிசீலனை செய்யும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.