இயற்கையான, பாரம்பரியமான உணவு குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவையில், மாநில அளவிலான 24ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைந்து இந்த மாநாட்டை நடத்தியது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 244 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இவற்றில், 30 ஆய்வுக் கட்டுரைகள் வரும் டிசம்பர் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை மகாராஷ்டிர மாநிலம் வாராமதியில் நடைபெறும் தேசிய மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவி பி.கலாவதி, மாணவர்கள் ஈ.வெங்கடேஷ், கே.சிவராமன், எம்.பிரவீன் மற்றும் டி.வெங்கடேஷ் ஆகியோர் ஆசிரியர் எஸ்.அன்பரசுவின் வழிகாட்டுதலுடன் தயாரித்த ‘இயற்கை உணவும், உடல் நலனும்’ என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்திருந்தனர். அந்தக் கட்டுரை சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பரோட்டா, பானிபூரி, நூடுல்ஸ் மற்றும் குர்குரே, சாக்கோஸ் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு வகைகளான சாமை, குதிரைவாலி, தினை, சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருந்தனர். மன்னார்குடி மாணவர்களுக்கு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலும், ஆய்வுக் கட்டுரையை தயாரித்த மாணவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியரையும் பள்ளியின் தலைமையாசிரியர் டி.எல்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமையாசிரியர் முனைவர் எஸ்.சேதுராமன் ஆகியோர் பாராட்டினர்.
இந்நிலையில், தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆய்வுக் கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ’அழிய மறுக்கும் பீடித்தொழில்’ எனும் தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.