நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வகுப்பு நேரத்தில் மைதானத்தை சுத்தம் செய்ய சொல்வதாக புகார் எழுந்துள்ளது.
நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 550க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வகுப்பு நேரத்தில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது, விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை கொடுத்து வருகின்றனர்.
மேலும், கடந்த, மூன்று நாட்களாக பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குள் பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், அது குறித்து பள்ளி ஆசிரியர்கள் விசாரிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ’என்.எஸ்.எஸ்., மாணவர்கள்தான் மைதானத்தை சுத்தப்படுத்தினர். மாணவர்கள் சண்டையிட்டது பற்றி கேள்விப்பட்டோம். யார் என்ற விபரங்களை விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
இதுகுறித்து, பி.டி.ஏ., முன்னாள் தலைவர் தமிழழகன் கூறியதாவது:
மாணவர்களை பள்ளி நேரத்தில் வேலை செய்யச் சொல்வது சட்டப்படி குற்றமாகும். பள்ளி வளாகம், விளையாட்டு மைதானங்களை என்.எஸ்.எஸ்., உள்ளிட்ட மாணவர்கள்தான் சுத்தம் செய்வர். அதுவும், அதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர்கள் கடந்த, இரண்டு நாட்களாக வளாகத்திற்குள் சண்டையிட்டுக்கொண்டனர். நேற்று முன்தினம் மாலை, ஒடுவன்குறிச்சி சாலையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் இருதரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.