இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பொன்விழா அமைப்பு (LIC Golden Jubilee Foundation) நலிவுற்ற ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பொன்விழா உதவித்தொகையை (LIC Golden Jubilee Scholarship) வழங்க உள்ளது.கீழ்க்காணும் இரு நிலைகளிலான படிப்பு, பயிற்சிகளுக்கு இந்த உதவித்தொகையினைப் பெறலாம்.
1.மருத்துவம், பொறியியல் அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு.
2.தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படித்து தேசியத் தொழிற்பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட படிப்புகளில் 1ல் இடம்பெற்ற படிப்புகளுக்கு உதவித்தொகை பெற, 2015-16ம் கல்வியாண்டில் +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் 60% மதிப்பெண்களோடு தேர்ச்சி அவசியம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். 2ல் குறிப்பிட்ட படிப்புகளுக்கு 2015-16ம் ஆண்டு 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் 60% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு குறைவாக இருக்கவேண்டும்.
உதவித்தொகைக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்குப் படிப்புக் காலம் முழுதும் புதுப்பித்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டு மாதம் ரூ. 1000 வீதம் ஆண்டுக்கு ரூ. 10,000 உதவித்தொகை வழங்கப்படும். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திலும் மாணவர்கள் 10 பேர், மாணவிகள் 10 பேர் என மொத்தம் 20 பேருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://customer.onlinelic.in/GJF_scholarshipentry.htm என்ற இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தினை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தி்ல் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரி் குறிப்பிட வேண்டும். அந்த மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் கிடைத்ததற்கான ஒப்புதல் அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து, உதவித்தொகைக்கான தொடர்புகள் அனைத்தும் ஆயுள் காப்பீட்டுக் கழக மண்டல அலுவலகத்திலிருந்து மேற்கொள்ளப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.9.2016.
விண்ணப்பிக்கும் முறை, தேவையான சான்றிதழ்கள், விதிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மேலே குறிப்பிட்ட இணையதளத்தைக் காணலாம். அல்லது அருகிலுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளை/மண்டல அலுவலகங்களை அணுகலாம்.
- தேனி.மு.சுப்பிரமணி
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
www.tnpgtakarurdt.in