உலகில் சுமார் 781 மில்லியன் பேர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்றில் 2 பேர் பெண்கள். 2006ல் யுனெஸ்கோவின் அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன்படி தெற்கு மேற்கு ஆசியா பகுதிகளில் மிகக்குறைந்த சதவீதம் பேர் (68.6) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்து ஆப்பிரிக்காவும் (62 சதவீதம்) உள்ளது. தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினோபாசோ (12.8 சதவீதம்) நைஜர் (14.4) மாலி (19) ஆக உள்ளது. எழுத்தறிவின்மை என்பது வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் கடந்து, பல்வேறு முன்னேற்றமின்மைக்கு காரணமாக விளங்கி விடுகிறது. நம் நாட்டைப் பொறுத்தளவில் வேலை, பொருளாதாரம் போன்றவற்றுக்கு கல்வியே பிரதானம். கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு முன்பு வரை பரம்பரைச் சொத்து இதனை தீர்மானித்து வந்தது.
உலகின் பலதரப்பட்ட விபரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில் எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. நாட்டு நடப்புகள், தனக்கு, தன் குடும்பத்திற்கான விபரங்கள் போன்றவற்றிற்கு பிறரை நம்பியே காலம் தள்ள வேண்டியுள்ளது. எழுத்தறிவு பிரச்னை கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய சமூக பிரச்னை என்று கருதப்படுகிறது. 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் எழுத்தறிவு 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதமாகும். 2001 கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது. எழுத்தறிவில் கேரளா முதலிடத்தையும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. எழுத்தறிவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி 1952ல் சமூக கல்வித் திட்டம், 1967ல் கிராம விவசாயிகளின் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன.
75ல் பள்ளி சாராக்கல்வி திட்டம், 78ல் தேசிய வயது வந்தோர் கல்வித்திட்டம், 86ல் மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டன. மேலும் சர்வசிக்ஷா அபியான் திட்டம் எனும் அனைவருக்கும் கல்வித்திட்டம் 2000ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை இது கொண்டிருந்தது. அறிவு என்பது ஓர் ஆயுதம் என்கிறார் திருவள்ளுவர். கல்லாதவர் வாழும் வீடு வெளிச்சமில்லா இருண்ட வீடு என்று பாரதிதாசன் கூறுகிறார். அறிவுடையார் எல்லாம் உடையார். எழுத்தறிவின்மை ஒரு குற்றம். அதை நாட்டை விட்டே அகற்றிட வேண்டும் என்கிறார் காந்தியடிகள். எழுத்தறிவே சமூகத்தின் ஆணிவேர் என்பதால் அனைவரும் எழுத்தறிவு பெற ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவோம்.
www.tnpgtakarurdt.in