இன்று பள்ளி மாணவ, மாணவியருக்கு
பாடப்புத்தகம் மற்றும் நலத்திட்டங்கள்
வழங்குவதில், தெளிவான அறிவுரை
இல்லாததால், ஆசிரியர்கள் மற்றும் மாணவ,
மாணவியர் குழப்பம் அடைந்தனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து,
இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்த
முதல்நாளே, மாணவர்களுக்கு விலையில்லா
பாடப்புத்தகங்கள்,
நோட்டுப்புத்தகம், பேக் உள்ளிட்ட நலத்திட்ட
உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கேற்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களும்
முன்கூட்டியே அனைத்து பொருட்களையும்
பெற்று, தயாராக வைத்திருந்தனர். இந்நிலையில்,
பாடப்புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட
பொருட்களை, மறு உத்தரவு வரும் வரை,
மாணவர்களுக்கு தர வேண்டாம் என வாய்மொழி
உத்தரவிடப்பட்டது.
இதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
குழப்பம் அடைந்தனர். பாடப்புத்தகம்
வினியோகத்தை நிறுத்தக் கூறியதால், ஏதாவது
மாற்றம் வருமோ என்ற அச்சமும் நிலவியது.
எப்போது வரை வழங்கப்படாமல் நிறுத்த
வேண்டும் என்பதையும், ஏன் என்பதையும் எந்த
விளக்கமும் கல்வித்துறையால் கூறப்படாததால்
இந்நிலை ஏற்பட்டது.
முதலமைச்சர் பாடப்புத்தகங்களை வழங்கி
தொடங்கி வைத்த பின், மதியம் 2 மணியளவில்,
பாடப்புத்தகங்களை வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனால், நேற்று மதியத்துக்கு மேல், மாணவ,
மாணவியருக்கு பாடப்புத்தகம் மற்றும்
நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.