்விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி
ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில்
தாமதம் ஏற்படும் என, தெரிகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் மற்றும்
இரண்டு வகை முக்கிய பாடங்களுக்கு தேர்வுகளும்
முடிந்துள்ளன. முதல் கட்ட மாக, 8.5 லட்சம் மாணவர்கள்
எழுதிய மொழி பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும்
பணி துவங்கி உள்ளது.
அதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார்
பள்ளி ஆசிரியர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த,
தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால்,
பெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியர்களை
தேர்வு பணிக்கு அனுப்பவில்லை. எனவே, விடைத்தாள்
திருத்தும் பணி முடிய தாமதமாகும் சூழல் ஏற்பட்டு
உள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கு, விரைவில்
திருத்தம் மேற்கொள்ள, 'கீ ஆன்சர்' தயாரிக்கும் பணி
துவங்கியுள்ளது.வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் பிற
ஆசிரியர்களிடமிருந்தும், 'கீ ஆன்சர்' வாங்க,
தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளனர். இதிலும், பல தனியார்பள்ளிகள்
தங்கள் ஆசிரியர்களை அனுப்பவில்லை.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள்
கூறியதாவது:தேர்வுத்துறை, தனியார் பள்ளிகளை கண்டு
கொள்வதில்லை. தனியார் பள்ளி மாணவர்கள் தான், 50
சதவீதத்துக்கும் மேல் தேர்வு எழுதுகின்றனர்.தனியார்
பள்ளிகளில், 10ம் வகுப்புக்கும், பிளஸ் 2வுக்கும்
தற்போதே பாடம் எடுக்க, ஆசிரியர்களை
பயன்படுத்துகின்றனர். அதனால், ஏதாவது காரணம் கூறி,
விடைத்தாள் திருத்தம் மற்றும், 'கீ ஆன்சர்' தயாரிப்பு
பணிக்கு அனுப்ப மறுக்கின்றனர். இதேநிலை நீடித்தால்,
தேர்வு முடிவுகள் வெளியிடுவது தாமதமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏப்., 5ல் துவக்கம்:
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மொழி பாட
தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 5
முதல் துவங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளளது. இந்த
முடிவுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்
தேர்வு, மார்ச், 15ல் துவங்கியது; தமிழ் தேர்வு
முடிந்துள்ளது.
இன்று, ஆங்கிலம், முதல் தாள் தேர்வு நடக்கிறது. மார்ச்,
29ல், ஆங்கிலம், இரண்டாம் தாள் தேர்வு நடக்க உள்ளது.
இதில், 10 லட்சம் மேற்பட்ட மாணவர், தனித்தேர்வர்கள்
பங்கேற்றுள்ளனர். மொழி பாடங்கள் தேர்வு முடிந்ததும்,
ஏப்., 5 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்க
உள்ளது. 'இதற்கு அனைத்து மொழி பாட ஆசிரியர்களும்
தயாராக இருக்க வேண்டும்' என, தேர்வுத்துறை
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்க உள்ளது. எனவே,
ஏப்ரலுக்குள், பொதுத் தேர்வுப் பணிகளை முடிக்க,
பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஆனால்,
ஏப்ரல், 5ல் விடைத்தாள் திருத்தும் பணியை துவக்க,
ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'பொதுத் தேர்வு
நடந்து கொண்டிருக்கும் போதே, விடைத்தாள் திருத்தும்
பணியை மேற்கொள்ள முடியாது. பிளஸ் 2வை விட, 10ம்
வகுப்பு பொதுத்தேர்வில், கூடுதலாக, இரண்டு லட்சம்
மாணவர் பங்கேற்பதால், தேர்வு அறை பணிக்கே கூடுதல்
ஆசிரியர்கள் தேவை. எனவே, ஏப்., 15க்கு பின்,
விடைத்தாள் திருத்தும் பணியை துவக்க வேண்டும்' என,
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.