அகமதாபாத் : தேசப்பிதா காந்திக்கு மகாத்மா பட்டம்
அளித்தது, ரவீந்திரநாத் தாகூர் அல்ல, ஒரு நிருபர் என
உயர் நீதிமன்றத்தில் குஜராத் அரசு கூறியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் உட்பட 6
மாவட்டங்களில் பஞ்சாயத்து சார்பில் கிராம கணக்காளர்
பதவிக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில்
காந்திக்கு மகாத்மா பட்டம் வழங்கியது யார்? என்ற
கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கான விடையில்
ரவீந்திரநாத் தாகூர், பெயர் தெரியாத நிருபர் என 4
பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. தேர்வு
எழுதியவர்கள் பெரும்பாலானோர் ரவீந்திரநாத் தாகூர்
என்ற விடையை டிக் செய்தனர். இந்த
கேள்விகளுக்கான விடைகள் அடங்கிய புத்தகத்திலும்
ரவீந்திரநாத் தாகூர் என்பதே சரியான விடை என
முதலில் இருந்தது.
ஆனால் காந்தியவாதி நாராயண் தேசாய் என்பவர்
எழுதிய புத்தகம் ஒன்றில், காந்தி தென்
ஆப்பிரிக்காவில் இருந்தபோது அவரை மகாத்மா என
குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள
ஜேத்பூர் என்ற நகரத்தைச் சேர்ந்த நிருபர் ஒருவர்,
தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என
கூறப்பட்டுள்ளது. இதை மேற்கோள்காட்டி, காந்திக்கு
மகாத்மா காந்தி பட்டம் வழங்கியவர் பெயர் தெரியாத
நிருபர் என்பதே சரியானது என விடை புத்தகத்தில்
திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூர்
என்ற பதிலை டிக் செய்தவர்களுக்கு மதிப்பெண்
வழங்கப்படவில்லை.
இதை எதிர்த்து சந்தியா மாரு என்பவர் குஜராத் உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு
விசாரணை நேற்று நடந்த போது, ராஜ்கோட்
பஞ்சாயத்து சார்பில் அளிக்கப்பட்ட பதிலிலும்,
‘‘முதலில் மகாத்மா என குறிப்பிட்டது சவுராஷ்டிரா
பகுதியைச் சேர்ந்த பெயர் தெரியாத நிருபர்தான்’’ என
கூறப்பட்டுள்ளது.