Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, February 16, 2016

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக வளாகம்; ஜெயலலிதா திறந்துவைத்தார்

சென்னை,
கொட்டிவாக்கத்தில் ரூ.59 கோடி மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்டப்பல்கலைக்கழக வளாகத்தை முதல்-அமைச்சர்
ஜெயலலிதா திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சீர்மிகு வகுப்புகள்
சட்டக்கல்விக்கென தனியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்டப்பல்கலைக்கழகத்தை தெற்காசியாவிலேயே முதன்
முதலாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறுவினார். இந்தப்
பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு சட்டக்கல்லூரிகளும், ஒரு
தனியார் சுயநிதி சட்டக்கல்லூரியும் இயங்கி வருகின்றன.
மேலும், சீர்மிகு சட்டப்பள்ளி மூலம் இளநிலை மற்றும்
முதுநிலை சீர்மிகு வகுப்புகளை நடத்தி வருகிறது.
தற்போது சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள
பூம்பொழில் வளாகத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்டப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சீர்மிகு
சட்டப்பள்ளி 4.82 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய இடத்தில்
இயங்குகிறது.
திறந்துவைத்தார்
எனவே, இப்பல்கலைக்கழகம் மேலும் சிறப்புடன் இயங்கும்
வகையில், அதற்காக பெருங்குடியில் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள இடத்தில் நிர்வாக கட்டிடம், நூலக
கட்டிடம், இளநிலை மற்றும் முதுநிலை
மாணவர்களுக்கான வகுப்பறைகள் அடங்கிய கட்டிடங்கள்,
மாணவ, மாணவியர் விடுதிகள், உள் மற்றும் வெளி
விளையாட்டு அரங்கங்களை உள்ளடக்கிய ஒரு
முழுமையான பல்கலைக்கழக வளாகம் கட்டப்படும் என்று
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில்
அறிவித்தார்.
அதன்படி, சென்னை, பெருங்குடி - கொட்டிவாக்கம்
கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து
205 சதுர அடி கட்டிட பரப்பளவில், 59 கோடியே 27 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு டாக்டர்
அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக வளாகத்தை காணொலிக்
காட்சி மூலமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14-ந்தேதி
திறந்துவைத்தார்.
‘வைபை’ வசதியுடன்...
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக
வளாகத்தில், சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கு
குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட
வகுப்பறைகளும், கணினி மயமாக்கப்பட்ட நூலகமும்,
அந்நூலகத்தில் ஒரே நேரத்தில் 180 மாணவர்கள்
இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய கணினி வசதியும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நூலகத்தில் சுமார் 50 ஆயிரம் நூல்கள் மாணவர்களின்
பயன்பாட்டிற்கு உள்ளன. மேலும், ஆராய்ச்சி மாணவர்கள்
பயன்பெறும் வகையில் மின் நூலகமும்
அமைக்கப்பட்டுள்ளது. இவற்றைத்தவிர பல்கலைக்கழக
வளாகம் முழுவதிலும் இணையதள வசதியுடன் கூடிய
கம்பியில்லா மண்டல (வைபை) வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நவீன வகுப்பறைகள்
இளநிலை சீர்மிகு சட்டப்படிப்பு மாணவர்களுக்கென
குளிரூட்டப்பட்ட 25 நவீன வகுப்பறைகளைக் கொண்ட
கட்டிடமும், முதுநிலை சீர்மிகு சட்டப்படிப்பு
மாணவர்களுக்கென குளிரூட்டப்பட்ட 25 நவீன
வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.
அக்கட்டிடங்கள் ஒவ்வொன்றிலும் 3 கருத்தரங்க
கூடங்களும், மாதிரி நீதிமன்ற அரங்கமும்
அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் தலா 75
அறைகளுடன் கூடிய 2 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.