ஊட்டியில் ரூ. 5 கோடியில் மலை மேலிட பயிற்சி மையம், மதுரையில் ரூ. 5
கோடியில் விளையாட்டு அறிவியல் மையம் உள்ளிட்ட விளையாட்டு மேம்பாட்டுக்கான
பல புதிய திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கை:
''இந்தியாவிலேயே மலை மேலிட பயிற்சி முகாம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள
ஷில்லாரு மற்றும் கேரளாவில் உள்ள மூணாறு ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே
உள்ளது. பெரும்பாலான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குளிர் பிரதேசங்களில்
நடைபெறுவதால் நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் அங்கு நிலவும்
தட்ப வெப்ப நிலையை சமாளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டியது
அவசியம் ஆகும். எனவே நமது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின்
செயல் திறனை மேம்படுத்த ஏதுவாக, உதகமண்டலத்தில் மலை மேலிட பயிற்சி மையம்
ஒன்று 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டம் பளு தூக்கும்
போட்டிகளில் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. பளு தூக்கும் போட்டியில்
தேசிய அளவில் பதக்கம் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்
மற்றும் காமன்வெல்த், ஆசிய, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்
வென்ற விளையாட்டு வீரர்கள் வேலூர் மற்றும் அதன் சுற்றுப் புறத்திலிருந்து
உருவானவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
பளு தூக்கும் போட்டியில் சர்வதேச அளவில் பேசப்படும் இடமாக வேலூர் பகுதி
அமைந்துள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில், 1992 ஆம் ஆண்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சிறப்பு நிலை பளு தூக்கும்
பயிற்சி மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்பயிற்சி
மையத்தில் பயிற்சி பெற்ற சதீஷ் குமார் சிவலிங்கம் 2014 ஆம் ஆண்டு
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
எனவே, மேலும் பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பதக்கம் வெல்ல ஏதுவாக,
இப்பயிற்சி மையன் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் முதன்மை நிலை பயிற்சி
மையமாக தரம் உயர்த்தப்படும்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெறும்
போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு
அறிவியல் ரீதியான உயர்நிலைப் பயிற்சி மிக அவசியமான ஒன்றாகும். அறிவியல்
ரீதியான பயிற்சி விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும், நமது
மாநிலத்தில் வழங்க இயலாத காரணத்தினால் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள்
உயரிய நிலையை அடைய இயலவில்லை. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நம்
மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திறம்பட
செயலாற்ற அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அறிவியல் உபகரணங்கள்
மற்றும் விளையாட்டு மருத்துவ வசதியுடன் கூடிய அறிவியல் விளையாட்டு மையம்
ஒன்று அமைக்கப்படும்.
விளையாட்டு மருத்துவம், விளையாட்டு உளவியல், விளையாட்டு உடற் கூறியல்,
உயிர் இயந்திரவியல் சத்துணவியல், மறு சீரமைப்பியல் மற்றும் ஊக்க மருந்து
எதிர்ப்பு ஆகிய வசதிகளுடன் கூடிய விளையாட்டு அறிவியல் மையம் ஒன்று
மதுரையில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
தேசிய மாணவர் படை, NCC மாணவர்கள் பல்வேறு திறன்கள் பெறுவது ஊக்குவிக்கப்பட
வேண்டும். எனவே, அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக ஓட்டுநர்
பாவிப்பு, வானூர்தி பாவிப்பு மற்றும் ஆயுத பாவிப்பு ஆகிய பயிற்சிகள்
அளிக்கப்படும்.
இதன் மூலம் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய
விழிப்புணர்வு, வாகனம் ஓட்டும் திறமை, வானூர்தி பயிற்சி பெற்ற உணர்வு
மற்றும் அசல் துப்பாக்கியால் சுடும் உணர்வுகளை பெறும் வாய்ப்பு கிட்டும்.
மதுரை இடையபட்டியில் அமைக்கப்பட்டு வரும் தேசிய மாணவர் படை பயிற்சி
அகாடமியில் வாகன ஓட்டுதல் பாவிப்பு வானூர்தி பாவிப்பு மற்றும் ஆயுத
பாவிப்பு ஆகிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
இது போன்ற பயிற்சி இந்தியாவிலேயே முதன் முறையாக இங்கு தமிழ்நாட்டில்
அறிமுகப்படுத்தப்படும். மேலும், இளைஞர்கள் தங்களது வேலைவாய்ப்பினை
அதிகரித்துக் கொள்ள, தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்திக் கொள்வது
அவசியமானதாகும். எனவே, தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமியில் மொழி ஆய்வுக்
கூடம் ஒன்றும் அமைக்கப்படும். இவை 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இந்த அறிவிப்புகள் தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்
உலகளவில் பதக்கங்களை பெறவும், உடல் மற்றும் மன வலிமைகளைப் பெறவும்
வழிவகுக்கும்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.