சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை (B.sc Agri) மற்றும் பிஎஸ்சி தோட்டக்கலை (B.sc Horticulture) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2015-16ம் ஆண்டுக்கான பிஎஸ்சி வேளாண்மை (B.sc Agri) மற்றும் பிஎஸ்சி தோட்டக்கலை (B.sc Horticulture) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த மே 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 22-ம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து படிப்பு மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டன. பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மை படிப்பில் 1000 பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பில் 70 பேரும் மாணவ, மாணவியர்கள் தனி கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர். வேளாண்மை படிப்பில் சேருவதற்கு 11,053 விண்ணப்பங்களும் வரப்பெற்றன. பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை சீட்டு தாபல் மூலம் அனுப்பப்பட்டது. பிஎஸ்சி வேளாண்மை (B.sc Agri) மற்றும் பிஎஸ்சி தோட்டக்கலை (B.sc Horticulture) சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண்களை (ரேண்டம் எண்) சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், சேர்க்கை பிரிவு ஆலோசகர் தி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். குறுந்தகவல் மூலமாகவும் தகவல் அனுப்பப்படும். தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்பட்டியும், மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழகஅரசின் விதிப்படி ஒதுக்கப்படும். அனுமதி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட்டும். மேலும் பல்கலைக்கழகக இணையதளத்தில் www.annamalaiuniversity.ac.in மூலமாகவும்,auadmission2015@gmail.com என்ற முகவரியிலும், மைய தொலைபேசி எண்கள் 04144-238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.