Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, June 15, 2015

பி.இ. சேர்க்கை: சம வாய்ப்பு எண் இன்று வெளியீடு

தமிழகத்தில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 15) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
 2015-16 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பிற மையங்களிலும், மே 29-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் விநியோகமாகின. இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும்.
 இதுபோல் நிறைவு செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கையும் இம்முறை வெகுவாகக் குறைந்துள்ளது. வெறும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்த முறை சமர்ப்பித்துள்ளனர்.
இன்று சம வாய்ப்பு எண்: இந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சம வாய்ப்பு எண் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக இணையதளமான www.annauniv.edu-இல் பதிவேற்றம் செய்யப்படும்.
10 இலக்க சம வாய்ப்பு எண்: ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது, கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
 கணிதப் பாடத்தோடு இயற்பியல், வேதியல் பாடங்களின் மதிப்பெண்களும் பலருக்கு சமமாக இருக்கும்போது, பிளஸ் 2 நான்காவது பாட மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
 நான்காவது பாட மதிப்பெண்ணும் சமமாக இருக்கும்போது, பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
 பிறந்த தேதியும் சமமாக இருக்குமானால், அத்தகைய மாணவர்களை தரவரிசைப் பட்டியலில் வரிசைப்படுத்த சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும். சம வாய்ப்பு எண்ணின் மதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தரவரிசைப் பட்டியலில் முதன்மை இடம் அளிக்கப்படும்.
 இது கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் 10 இலக்க எண் ஆகும்.
விண்ணப்பித்த அனைவருக்கும் இடம்: இப்போதைய நிலவரப்படி 1.80 லட்சம் இடங்கள் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வில் இடம்பெற்றிருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். கலந்தாய்வு தொடங்கிய பின்னர் தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு ஒப்படைப்பார்கள் என்பதால், இடங்களின் எண்ணிக்கை 2.20 லட்சத்தைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. 
 இந்த நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) பி.இ. படிப்புகளில் சேர 1.54 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும் இடம் கிடைக்கும் நிலை காணப்படுகிறது.
ஜூன் 19-இல் தரவரிசைப் பட்டியல்
 தமிழகத்தில் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலை வரும் 19-ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.
 ஜூன் 28 முதல் கலந்தாய்வு: பி.இ. படிப்பில் சேர விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி தொடங்குகிறது.
 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும்.