Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, June 05, 2015

புத்தக வாசிப்பால் மன ரீதியான மாற்றம்; கூர்நோக்கு இல்ல சிறார்களுக்கு புது வாழ்வு


கூர்நோக்கு இல்லத்திற்கு வரும் சிறார்கள், செய்த தவறை உணருவதற்கும், மன ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவும், புத்தக வாசிப்பை ஊக்குவித்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாறிவரும் கலாசார பிரதிபலிப்புகளை, எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் சிறார்கள், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. திருட்டு, கொலை முயற்சி, கொள்ளை என, பல்வேறு குற்றச்செயல்களுக்காக, போலீசாரால் கைது செய்யப்படும் சிறார்கள், சிறார் நீதிமன்றத்தின் முன்பு ஒப்படைக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கவும், குற்றசெயல்களில் மீண்டும் ஈடுபடாமல் இருக்கவும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயிலில் எடுக்கும் வரை, கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர்.

கோவை மாவட்ட சிறை மீண்டோர் நல்வாழ்வு சங்கம் சார்பில், அரசின் உதவியோடு, லட்சுமி மில் பகுதியில், கூர்நோக்கு இல்லம் செயல்படுகிறது. இங்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள, 400 காவல் நிலையங்களில் குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்படும் சிறார்கள் தங்க வைக்கப்படுவர்.குறுகிய கால தண்டனையில் வரும் சிறார்களை, உடனடியாக பெயிலில் எடுப்பதால், தவறை உணர வாய்ப்பே இன்றி, மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவது, அதிகரித்து வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, கூர்நோக்கு இல்லத்திற்கு வரும் சிறுவர்களுக்காக, நீதிக்கதைகள், வழிகாட்டி புத்தகங்கள், சிந்தனையை ஒழுங்குப்படுத்த யோகா, சிறுசிறு கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி என, நேரத்தை பயனுள்ளதாக கழிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், செய்த தவறை உணரவும், மன ரீதியான மாற்றத்தை காணவும் முடிவதாக, உளவியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூர்நோக்கு மைய அதிகாரிகள் கூறுகையில்,''சிறுவர்கள் வளரும் விதம், குடும்ப சூழல், கவனிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தான், குற்றச்செயலில் ஈடுபடுத்துகிறது. செய்த தவறை உணர்வதற்காக அளிக்கப்படும் தண்டனை காலத்தில், மன மாற்றம் ஏற்படுவது அவசியம். இதற்கு, புத்தக வாசிப்பே மிகச்சிறந்த ஆயுதம்,'' என்றனர்.