ஒரு அரசாங்கத்தின் செயல்பாடு தொடர்பாக ஒரு வருஷத்துக்குள் ஒரு முடிவுக்கு வருவது நியாயம் அல்ல. ஆனால், அரசாங்கம் செல்லும் திசையை மக்களும் மக்களின் எண்ண ஓட்டம் செல்லும் திசையை அரசாங்கமும் அறிந்துகொள்ள இத்தகைய மதிப்பீடுகள், கள ஆய்வுகள் நிச்சயம் உதவுகின்றன.
கடந்த இரண்டு வாரங்களாக வெளியான 'மோடி 365' சிறப்புப் பகுதியில் பல்வேறு துறைசார் நிபுணர்கள், அரசியல் விமர்சகர்கள் இந்த ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். சரி, மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
சென்னையில் தொடங்கி குமரி வரை 'தி இந்து' செய்தியாளர்கள் மக்களிடம் பேசினார்கள். முக்கியமாக சில கேள்விகளை முன்வைத்தார்கள்.
"பிரதமர் பதவிக்கு யார் வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள், இப்போதைய மோடி ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், ஓராண்டு ஆட்சியின் நல்ல - மோசமான விஷயங்களாக எவற்றைப் பார்க்கிறீர்கள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது" என்றெல்லாம் 10-க்கும் மேற்பட்ட கேள்விகளை மக்களிடம் கேட்டார்கள்.
இந்தக் கேள்விகளின் இறுதியில் ஆட்சியை மதிப்பிடச் சொன்னார்கள் (ஒரு நட்சத்திரம் என்றால், மோசம்; இரு நட்சத்திரங்கள் என்றால், தேவலாம்; மூன்று நட்சத்திரங்கள் என்றால் அருமை; நான்கு நட்சத்திரங்கள் என்றால், மிகப் பிரமாதம்). இதற்கெல்லாம் மக்கள் சொன்ன பதில்கள், அவர்கள் கொடுத்த மதிப்பீடுகளின் மாதிரிதான் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு நமக்குத் தெளிவாக மூன்று விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது:
1. மோடியின் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தவர்களையும்கூட அவருடைய முதலாண்டு ஆட்சி திருப்திப்படுத்தவில்லை.
2. அதே சமயம், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி எதிர்க்கட்சிகளுக்கான அனுகூலமாக மாறவில்லை. குறிப்பாக, ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கின்றன. இடதுசாரிகளின் தாக்கத்தையும் மக்களிடம் பார்க்க முடியவில்லை.
3. அனைவருக்குமான வங்கிக் கணக்குத் திட்டம், காப்பீட்டுத் திட்டம், செல்வ மகள் திட்டம் போன்ற வெகுஜனத் திட்டங்கள் மோடி அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்திருக்கின்றன. நிலம் கையகப்படுத்தும் மசோதா, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், வெறுப்பு அரசியல் போன்றவை மக்களிடம் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருக்கின்றன.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்புமே பாடம் படிக்க வேண்டிய செய்திகள் இவை.