Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, June 15, 2015

அங்கன்வாடிகளுக்கு கணினி: மத்திய அரசு திட்டம்

குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு குறித்த விவரங்களை நாள்தோறும் பதிவேற்றம் செய்யும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கையடக்க கணினி (டேப்லட் பிசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய மகளிர், குழந்தைகள் நல அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாள்தோறும் வழங்கப்படும் உணவு, கூடுதல் ஊட்டச்சத்து உணவுகள், அவர்களது உடல்நிலை ஆகியவற்றை பதிவேற்றம் செய்வதற்கான புதிய செயலியுடன் கையடக்க கணினி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 இதன் மூலம், ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட "ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்' முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அரசு ஆராய முடியும்.
 இவ்வாறு ஆய்வு செய்யும்போது, அரசு பரிந்துரைத்த உணவின் அளவுக்கும், நாள்தோறும் வழங்கப்படும் உணவின் அளவுக்கும் வேறுபாடு இருந்தால் அதனைக் கண்டறிந்து சரிகட்ட முடியும்.
 தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் தொடர்பான விவரங்களை, காலமுறைப் பதிவேடுகளாக மாநில அரசுகள் அளித்து வருகின்றன. அவற்றை ஆராய்வதற்கான கண்காணிப்பு அமைப்புகள் கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றன.
 இந்நிலையில், கையடக்க கணினி மூலம் விவரங்களைப் பெறுவதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை எளிதாகக் கண்டறிந்து, தேவையான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 நாடு முழுவதும் 13.42 லட்சம் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதுடன், பள்ளிப் படிப்புக்கு முந்தைய அடிப்படைக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
 இதன் மூலம், நாடு முழுவதும் 10 கோடி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இவர்களில் 8.5 கோடி குழந்தைகள் 6 வயதுக்கும் குறைவானவர்கள்.