Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 25, 2015

சாஸ்த்ரா பல்கலை.யில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
 இந்தக் கலந்தாய்வைத் தொடக்கி வைத்த தூர்தர்ஷன் சென்னை மையச் செய்திப் பிரிவு இயக்குநர் இ. மாரியப்பன் பேசியது:
 இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மிக வெளிப்படையாகவும், எந்தவித இடையூறுகளுக்கும் இடம் கொடுக்காமல் தர வரிசை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. மற்ற நிறுவனங்களைப் போல நன்கொடைகள் எதுவும் வசூலிக்காமல் மாணவர்களுக்குத் தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது இப் பல்கலைக்கழகம். இதனால், அகில இந்திய அளவில் உயர் கல்விக்காக இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வருகின்றனர்.
 உயர் கல்வியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக நம் நாடு உள்ளது. நமக்கும் முதல் நிலைக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நம் நாட்டில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எனவே, ஆய்வுத் துறைகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மாரியப்பன்.
 பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம், மேம்பாடு) எஸ். வைத்திய சுப்பிரமணியம் பேசியது:
 இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இப்பல்கலைக்கழகத்தில் பி.டெக்., ஐந்தாண்டு எம்.டெக். படிப்புகளில் உள்ள 1,600 இருக்கைகளுக்கு அகில இந்திய அளவில் 18,000 விண்ணப்பங்கள் வந்தன.
 இதில், 78 சத மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 90 சதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள். ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் வருகையும் இப்பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு அதிகரித்துள்ளது.
 நிகழாண்டு வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், அருணாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை மூலம் கல்விக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது என்றார் வைத்திய சுப்பிரமணியன். இந்தக் கலந்தாய்வு தொடர்ந்து ஜூன் 27 வரை நடைபெறவுள்ளது.