1. வாசிப்பு மொழி வளத்தை அதிகரிப்பதால் சரளமாக பேசுவதற்கு உதவும். என்னுடைய வகுப்பில் பல மாணவர்கள் தமிழில் கூட நினைத்ததை சொல்ல முடியாது திணறுவதை பார்க்கிறேன்.
ஆனால் வாசிப்பு பழக்கம் உள்ள மாணவர்கள் சரளமாக தன்னம்பிக்கையாக
பேசுகிறார்கள்.
2. மொழியின் இயக்கம் ஒரு தர்க்கத்தை சார்ந்து இருக்கிறது.
நன்றாக வாசிக்கிறவர்கள் எந்த துறை பற்றியும் புத்திசாலித்தனமாக எதையாவது
பேசுவார்கள். இது வாசிப்பு தரும் தர்க்க அறிவினால் வருவது.
3. உரைநடை வாசிப்பை நான் ஒரு உரையாடலாக பார்க்கிறேன். உதாரணமாக நல்ல கட்டுரைகளை
அதிலுள்ள கருத்துக்களுடன் மனதளவில் வாதிட்டபடியே தான் படிக்க முடியும்.
இது வாதத் திறனையும் அதிகப்படுத்தும். இன்னொரு பக்கம் மூளையை
சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
4. புனைவு வாசிப்பு நம் உணர்ச்சிகளை கட்டமைக்கிறது. அரசியல் பிரக்ஞை தரலாம். அற உணர்ச்சியை தூண்டலாம். மனதை
பண்படுத்தலாம். வேறுவிதமாகவும் தூண்டலாம். உதாரணமாய் ஒருநாள் யூமா
வாசுகியின் கவிதைத் தொகுப்பு “அமுத பருவம் வலம்புரியாகி அணைந்ததொரு
சங்கு” படித்து விட்டு வண்டி ஓட்டும் போது சாலையில் எந்த அழகான பெண்ணை
பார்த்தாலும் அவ்வரிகள் என் கட்டுப்பாட்டையும் மீறி மனதில் மேலெழுந்து
வந்தன. முராகாமியின்Hear the Wind Singபடித்து விட்டு பீர் சாப்பிட
வேண்டும் என எண்ணம் தீவிரமாகியது. வாசிப்பு ஏதோ ஒரு ரசாயனத்தை நம் மனதில்
கலந்து விடுகிறது.
5. வாசிப்பை உயர்ந்த மனங்களுடான உரையாடலாக
பார்க்கிறேன். நாம் நடைமுறையில் பல அற்பத்தனங்கள் மத்தியில் வாழ்கிறோம்.
அப்போது வாசிப்பு ரெட் புல் குடித்தது போல் நம்மை சில அடிகள் மேலே தூக்கி
விடுகிறது.
6. போன வருடம் ஆறு மாதங்களாய் புரியாத ஒரு மன அழுத்ததில்
இருந்தேன். அப்போது எரிக் புரோமின்Fear of Freedomபடித்த போது சட்டென என்
பிரச்சனையின் காரணம் புரிந்து சரியாகி விட்டது. வாசிப்பு ஒரு
மருந்தாகவும் இருக்கலாம்.
- எழுத்தாளர். ஆர்.அபிலாஷ் அவர்களின் வலைப்பூவிலிருந்து