பிளஸ் 2 தேர்வில் கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி படித்த மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றது .அரசு பள்ளிகள் அளவில் குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. இப்பள்ளி மாணவி கிருத்திகா 1166 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும் பள்ளி அளவிலும் முதலிடம் பெற்றார். இவர், தமிழ் 194, ஆங்கிலம் 176, வணிகவியல் 199, கருத்தியல் (தியரி) 197, பிராக்டிகல் 1ல் 200, பிராக்டிகல் 2ல் 200 என மொத்தம் 1166 மதிப்பெண்கள் பெற்றார். இது குறித்து கிருத்திகா கூறுகையில், எனது தந்தை இல்லை. அம்மா பேபி கூலி வேலை செய்து வருகிறார். குளித்தலை பாரதி தெருவில் வசித்து வருகிறோம். 9ம் வகுப்பில் இருந்து இதே பள்ளியில் படித்து வருகிறேன்.
இன்னும் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். இருந்தாலும் அரசு பள்ளிகளின் மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் படித்ததுடன், டியூசனுக்கும் சென்றேன். வீட்டிலும் பள்ளி ஆசிரியர்களும் மிகவும் உதவியாக இருந்தனர். எதிர்காலத்தில் சிஏ படித்து ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பம் என்றார்.
இதே பள்ளி மாணவி ஷர்மிளா, தமிழ் 189, ஆங்கிலம் 186, வணிகவியல் 199, கணக்குப்பதிவியல் 200, கணிதம் 195, பொருளாதாரம் 195 என 1164 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பெற்றார். இது குறித்து மாணவி ஷர்மிளா கூறுகையில், அப்பா அசோக்குமார் விவசாய கூலித் தொழிலாளி. அம்மா சசிகலா இல்லத்தரசி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என நன்றாக படித்து தேர்வு எழுதினேன். அரசுப்பள்ளிகள் அளவில் இரண்டாமிடம் கிடைத்தது சந்தோஷமாக உள்ளது. மேலும், சிஏ படித்து ஆடிட்டராக வேண்டும் என்பது எனது நீண்ட கால விருப்பம் என்றார்.இதே பள்ளி மாணவி கோகிலா தமிழ் 196, ஆங்கிலம் 176, கணிதம் 200, இயற்பியல் 193, வேதியியல் 196, உயிரியல் 197 என மொத்தம் 1158 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் அளவில் மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்றார். இது குறித்து மாணவி கோகிலா கூறுகையில், தந்தை முருகேசன் விவசாயி. தாய் முத்துரெங்கம் இல்லத்தரசி. டாக்டராக வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார்.
மாவட்ட அளவில் குளித்தலை அரசு பள்ளி முதல் 3 இடங்களையும் பெற்றதற்கு கலெக்டர் ஜெயந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உட்பட அனைத்து அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.இப்பள்ளியில் 399மாணவிகள் தேர்வு எழுதினர்.இதில் 342 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 86 சதவீத தேர்ச்சியாகும். 17 மாணவிகள் 1000க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 3 மாணவிகளையும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.