கரூர்
பேருந்து கட்டுமானத் தொழில்:
ஆயிரம் சொன்னாலும் கரூரை பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரம் என்று சொல்வதற்கு ஈடாகாது. நகருக்கு உள்ளும் சுற்றுப்பகுதிகளிலும் பெரிய மற்றும் சிறியபேருந்து கட்டுமானத் தொழிற்சாலைகள் பரவலாக உள்ளன. இவை தமிழ்நாட்டின் தேவையை நிறைவு செய்வதுடன் பிற மாநிலப் பணிகளையும் மேற்கொள்கின்றன. பேருந்துகளின் கடைசியில் சிறிய பகுதியைப் பார்த்தால் புரியும். அது பிறந்த இடம் கரூராகத்தான் இருக்கும். கரூரையும் பேருந்துகளையும் பார்க்க மறந்து விடாதீர்கள்.
புகளுர் காகிதத் தொழிற்சாலை:
மரக்கூழ் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை நம் நாட்டிலேயே மிகப்பெரியது இதுதான். எண்பதுகளின் தொடக்கத்தில் கரூருக்கு அருகேயுள்ள புகளுரில் தொடங்கப்பட்டது இத்தொழிற்சாலை. கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே தலைமையான இடத்தில் இருக்கிறது. இது 1996 முதல் செயல்படுகிறது. காகிதங்களின் தாயகம்.
இந்நகரத்தில் அனைத்து வாகனங்களுக்குத் தேவையான செயின் தொழிற்சாலையும் உள்ளது.
- கரூர் நகருக்கு அருகே சிமெண்ட் தொழிற்சாலையும் உள்ளது. பளிங்குக்கல் நகரம் என்று கூறும் அளவில் தோகை மலையில் கிடைக்கும் வண்ண பளிங்குக் கற்கள் உலகளவில் புகழ்பெற்றுள்ளன
- தமிழக அரசின் கல் குவாரி தொழிற்சாலை மிகப் பிரபலமானது.
- ஏற்றுமதி தரத்தில் இங்கு கொசுவலை உற்பத்தி செய்யப்படுகின்றன.
- பாரம்பரியத் தொழிலான ரத்தினக்கல் வியாபாரத்திற்கும் இந்நகரம் பெயர் பெற்றுள்ளது.
ஈஐடி பாரி:
சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஈஐடி பாரி நிறுவனம் இதற்கு முன்னோடியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் 1842 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று மிகப்பெரும் சர்க்கரை ஆலையாக இயங்கி வருகின்றது. தரம் வாய்ந்த உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் ஆலை இது.
செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம்:
கரூர் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு தொழிற்சாலை செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன். இந்த சிமெண்ட் ஆலை கரூரில் புரியூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1968 ஆம் ஆண்டு சிமெண்ட் உற்பத்தியை தொடங்கியது. இன்று இந்நிறுவனம் வளர்ச்சியடைந்த சிமெண்ட் உற்பத்தி மட்டுமல்லாது உருக்குத் தொழிற்சாலை பின்னலாடை தொழில் மற்றும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வருடத்திற்கு 8500 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டித் தருகிறது.