கரூர்
வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாக விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரிலிருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கு திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.
கல்யாண வெங்கடராமசாமி கோயில்:
தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோயில் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்று. கரூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோயிலுக்குப் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். தெய்வீகம் ததும்பும் ஆலயம்.
பசுபதீஸ்வரர் கோயில்:
புண்ணிய சிவத் தலங்கள் ஏழில் ஒன்று கரூர். இந்தப் பெருமையைப் தேடித்தந்தது பசுபதீஸ்வரர் கோயில். இங்கு சிவபெருமான் ஐந்தடி உயர லிங்க வடிவில் சுற்றுச் சிற்பங்களுடன் பிரும்மாண்டமாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்கமாதா சிற்பமும் வேலைப்பாடுகளில் தனித்தன்மை மிக்கவை.
மற்ற கோயில்கள்:
புகளுர் வேலாயுதம்பாளையம் குன்றில் உள்ள கோயிலில் சுப்ரமணியர் எழுந்தருளியுள்ளார். இது கரூருக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. கரூரின் இதயப் பகுதியில் மாரியம்மன் கோயில் பெரும் புகழ்பெற்றது. இந்த அம்மனுக்கு வருடா வருடம் மே மாதம் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கும்பம் எடுப்பார்கள். இந்த கும்பங்கள் கோயிலில் இருந்து அமராவதி ஆற்றுக்கு எடுத்து செல்லும் வண்ணமயமான காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இறைவனுக்கு கும்பம் எடுப்பது தமிழர்களிடம் ஆதி முதல் தொடர்ந்து வரும் ஆன்மிகச் சிறப்பு.
நம்ம கரூர் பெருமிதம் பேசுவோம் நாளையும்...