மத்திய அரசு, மருத்துவ படிப்புக்கு ’நீட்’ நுழைவுத் தேர்வு நடத்துவது போல, பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வை நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(IITs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs), இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIITs) ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் முதன்மை நுழைவுத் தேர்வை (Joint Entrance Examination - JEE (Main)) பொறியியல் படிப்புக்கும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வருவதன் மூலம், மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. எனவே, 2018-19 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, மருத்துவ நுழைவுத் தேர்வு ’நீட்’க்கு பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆரம்பத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, முதலமைச்சர் பன்னீர் செல்வம் ’நீட்’ தேர்வை ஒத்துக்கொண்டார். இந்நிலையில், பொறியியல் தேர்வுக்கும் நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு நடத்தினால், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் மட்டுமே கேள்விக்குறியாகும்.