பொதுத்தேர்வில், சரியான விடைகளை
மாணவர்கள் கோடிட்டு அடிப்பது ஒழுங்கீனமாக
கருதப்படும் என்ற புதிய விதிமுறையை, தேர்வுத்துறை
இயக்குனரகம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் வீணடிப்பதை தடுக்கும் நோக்கில்,
இந்நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பிளஸ் 2
மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களில் சிலர், தேர்வில் விடையை சரியாக
எழுதியிருந்தாலும், ஒன்றிரண்டு தவறான விடை
எழுதியிருப்பின், மற்ற விடைகளையும் அடித்து விட்டு,
சமர்ப்பிக்கின்றனர். அடுத்து வரும் சிறப்பு தேர்வில்,
மீண்டும் தேர்வெழுதி, முழுமையான மதிப்பெண்
பெறுவதற்காக, இவ்வாறு செய்கின்றனர். வரும்
பொதுத்தேர்வில் இருந்து, இச்செயல் ஒழுங்கீனமாக
கருதப்படும் என, தேர்வுத்துறை இயக்குனரகம்
அறிவித்துள்ளது.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: நன்கு
படிக்கும் மாணவர்கள் கூட, படப்படப்பில், விடைகளை
மாற்றி எழுதி விடுவர். இது, விடைத்தாள்
திருத்துவோரை எரிச்சலடையச் செய்யும். இதனால்,
மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க,
தவறான அல்லது தேவையின்றி விடை எழுதியிருப்பின்,
தேர்வு முடியும் தருவாயில், அவற்றை முழுமையாக
அடித்து விட்டு, என்னால் அடிக்கப்பட்டது என,
அப்பக்கத்தில் எழுதும் வழக்கம் உள்ளது.
இதனால், விடைத்தாள் அதிகம் வீணாவதோடு, மதிப்பீடு
செய்யும்போது ஆசிரியர்களுக்கு வீண் குழப்பம்
ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் நோக்கில், இச்செயல்
ஒழுங்கீனமாக கருதப்படும் என, தேர்வு துறை
அறிவுறுத்தியுள்ளது; வரும் பொதுத்தேர்வில் அமலாக
உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.