மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் தேசிய
சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் காலியான
ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப விதிகளை மீறி பணம்
பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து
டி.ஆர்.ஓ., வேலுச்சாமி தலைமையில் விசாரணை
கமிட்டி அமைத்து கலெக்டர் கே.வீரராகவ ராவ்
உத்தரவிட்டார்.மதுரையில் விவசாயிகள் குறைதீர்
கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் நடந்த விவாதங்கள் வருமாறு:முருகன்,
சோழவந்தான்: தேனி மாவட்ட இருபோக பாசன
வசதிக்காக பெரியாறு அணையில் இருந்து தேவையான
தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையில் இருந்து
மதுரை விவசாயிகள் நலன் கருதி இருபோக
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
ஜோதிபாசு, உதவி செயற்
பொறியாளர், பொதுப்பணித்துறை: வைகையில் இருந்து
950 கன அடி நீர் திறக்கப்பட்டது. விவசாயிகள்
தேவையான தண்ணீரை பயன்படுத்தி கொள்ள
வேண்டும். தண்ணீர் இருப்பை கணக்கிட்டு
திறக்கப்படுகிறது.குபேந்திரன், உசிலம்பட்டி: 58
கால்வாய் திட்டம் கனவு திட்டமாகவே போய் விடுமோ
என்ற அச்சம் நிலவுகிறது.
கலெக்டர்: 58 கால்வாய் திட்டப்பணிகள் குறித்து நேரடி
ஆய்வு செய்யப்படும்.
மணிகண்டன், மாங்குளம்: அக்ஷயா ரக நெல் விதையை
பயன்படுத்தி நடவு செய்தேன். விளைச்சல் இல்லை.
விசாரிக்கையில் போலி விதை என தெரிந்தது. நஷ்டஈடு
வழங்க வேண்டும்.இளங்கோ, விதை ஆய்வு துணை
இயக்குனர்: மணிகண்டன் வயலில் ஆய்வு செய்தபோது,
அவர் பயன்படுத்திய அக்ஷயா ரக நெல் தான் என
தெரியவந்தது.கலெக்டர்: அக்ஷயா ரக நெல் விதையை
ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும்.
கதிரேசன், அலங்காநல்லுார்: தேசிய சர்க்கரை ஆலைக்கு
கரும்பு வழங்கும் விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர்
2011 முதல் 14 வரை வறட்சியால் நஷ்டமடைந்தனர்.
அவர்களுக்கான கடன்
தள்ளுபடி செய்யவில்லை.மெய்யப்பன், அதிகாரி,
முன்னோடி வங்கி: பயிர் கடன்களை தள்ளுபடி செய்வது
குறித்து அரசிடம் இருந்து உத்தரவு
வரவில்லை.பழனிச்சாமி: கடன் வாங்கும்
விவசாயிகளுக்கு தெரிவிக்காமல், பன்னாட்டு
நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிக்க தனியார்
ஏஜன்சிகள் மூலம் நிலத்தை அபகரிக்கும் கொடுமை
நடக்கிறது.
கலெக்டர்: கடன் பாக்கி வைத்திருக்கும் விவசாயிகளுக்கு
முறைப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தவறும்
பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பதி, குலமங்கலம்: முதல்போக சாகுபடிக்கான நெல்
கொள்முதலை மார்ச் முதல் வாரத்தில் துவங்க
வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் விவசாயிகள்
பாதிக்கப்படுவர். இந்திய எண்ணெய் நிறுவனம் சார்பில்
பூமிக்கு அடியில் குழாய் பதிக்க விவசாயிகளிடம்
அனுமதி பெறுவதில்லை.
கலெக்டர்: குழாய் பதிப்பது பூமிக்கு மேல் அல்லது
பூமிக்கு அடியில் என இருவகை உள்ளது. விசாரணை
நடத்தப்படும்.ஜெயபாண்டி, பேரையூர்: பேரையூர்
தாலுகா வண்டாரி கலுங்கு என்ற அணைக்கட்டை சரி
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துப்பாண்டி,
கண்காணிப்பு பொறியாளர், பொதுப்பணித்துறை:
கலுங்கு அணைக்கட்டை உடைப்பை சரி செய்ய ஆய்வு
நடத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
பழனிச்சாமி, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்:
அலங்காநல்லுார் தேசிய சர்க்கரை ஆலை மேல்நிலைப்
பள்ளியில்
ஏற்கனவே ஒரு ஆசிரியர் மாதம் ரூ.2000 சம்பளம் பெற்று,
ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறார். காலியான
ஆசிரியர் பணியை முறைப்படி அவருக்கு வழங்கியிருக்க
வேண்டும். அதை விடுத்து ஆலை நிர்வாகம், விதிகளை
மீறி மற்றொருவருக்கு ஆசிரியர்
பணி நியமனம் வழங்கியுள்ளது. ஆலை உறுப்பினர் என்ற
அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிரப்பியது குறித்து
தகவல் மற்றும் நோட்டீஸ் அனுப்பவில்லை.
இதுகுறித்து விசாரிக்க வேண்டும். தாமதித்தால்
உயர்நீதிமன்றத்தில் முறையிடுவதை தவிர
வேறுவழியில்லை.
கலெக்டர்: ஆசிரியர் பணியிடம் நிரப்புவதில் முறைகேடு
நடந்துள்ளதா என டி.ஆர்.ஓ., தலைமையில் ஆர்.டி.ஓ.,
உள்ளிட்ட அதிகாரிகள் கமிட்டி விசாரித்து அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும்.