நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விபூஷண், பத்ம
பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் நேற்று (திங்கள்கிழமை) மத்திய அரசால்
அறிவிக்கப்பட்டது.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஆன்மிக பிரபலம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்,
விளையாட்டு வீராங்கனைகள் சானியா மிர்சா, சாய்னா நேவால் மற்றும் தீபிகா
குமாரி, நடிகர்கள் அனுபம் கேர், அஜய் தேவ்கன், பிரியாங்கா சோப்ரா உட்பட
மொத்தம் 112 பேர் 2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுகின்றனர்.
இம்முறை 10 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 83
பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர்
பெண்கள்; 10 பேர் வெளிநாட்டுப் பிரிவில் இடம்பெறுபவர்கள். 4 பேருக்கு
இறப்புக்குப் பிந்தைய கவுரமாக வழங்கப்படுகிறது.
டாக்டர் வி.சாந்தா:
2016-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெறும் டாக்டர் வி.சாந்தா, சென்னை -
அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் தலைவரும், புற்றுநோய் மருத்துவ
நிபுணரும் ஆவார். இவர் மார்ச் 11, 1927-ல் சென்னை, மைலாப்பூரில் பிறந்தார்.
இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் நோபல் பரிசு வென்ற சர் சி.வி.ராமன்
மற்றும் எஸ்.சந்திர சேகர் ஆகியோர் அடங்குவர். இவர் ஏற்கெனவே மாகசாசே விருது
வென்றுள்ளார், 1986-ல் பத்மஸ்ரீ, 2005-ல் பத்ம பூஷண், தற்போது 2016-ல்
பத்ம விபூஷண் விருது பெறுகிறார்.
பத்ம விருதுகள் பெறுவோர் விவரம்:
பத்ம விபூஷண்:
டெல்லியைச் யாமினி கிருஷ்ணமூர்த்தி (கலை - பரதநாட்டியம்), தமிழகத்தைச்
சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் (கலை - சினிமா), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த
கிரிஜா தேவி (கலை - இசைப் பாடல்), ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராமோஜி
ராவ் (இலக்கியம் - கல்வி - இதழியல்), தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்
விஸ்வநாதன் சாந்தா (மருத்துவம்), கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ
ரவிசங்கர் (ஆன்மிகம்), டெல்லியைச் சேர்ந்த ஜெக்மோகன் (பொதுநல விவகாரம்),
கர்நாடகத்தைச் சேர்ந்த வாசுதேவ் கல்குந்தே ஆத்ரே (அறிவியல் - பொறியியல்),
அமெரிக்காவைச் சேர்ந்த அவினாஷ் தீட்சித் (வெளிநாட்டுப் பிரிவு - இலக்கியம் -
கல்வி) மற்றும் இறப்புக்குப் பிந்தைய கவுரவமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த
தீருபாய் அம்பானி (வர்த்தகம் - தொழில்) ஆகிய 10 பேருக்கு பத்ம விபூஷண்
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண்:
அனுபம் கேர் - மகாராஷ்டிரா (கலை - சினிமா), உதித் நாராயணன் - மகாராஷ்டிரா
(கலை - பின்னணி பாடல்), சாய்னா நேவால் - தெலங்கானா (விளையாட்டு -
பேட்மிட்டன்), சானியா மிர்சா - தெலங்கானா (விளையாட்டு - டென்னிஸ்,
இறப்புக்குப் பிந்தைய கவுரமாக சுவாமி தயாந்த சரஸ்வ உள்ளிட்ட 19 பேருக்கு
பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ:
மயில்சாமி அண்ணாதுரை - கர்நாடகா - அறிவியல் - பொறியியல், சந்திரசேகர்
சேஷாத்ரி - தமிழகம் (மருத்துவம்), அருணாச்சலம் முருகானந்தம் - தமிழகம்
(சமூக சேவை), ஸ்ரீனிவாசன் தமால் கண்டலை - தமிழகம் (சமூக சேவை) அஜய் தேவ்கன்
- மகாராஷ்டிரா (கலை - சினிமா), பிரியங்கா சோப்ரா - மகாராஷ்டிரா (கலை -
சினிமா), எஸ்.எஸ்.ராஜமெளலி - கர்நாடகா (கலை - திரைப்பட இயக்கம்), தீபிகா
குமாரி - ஜார்கண்ட் (விளையாட்டு - வில்வித்தை) உட்பட 83 பேருக்கு பத்மஸ்ரீ
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.