கரூர்: பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர்
இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
சார்பில் மறியலில் ஈடுபட்ட, 425
ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக
அரசு, தன் பங்களிப்பு ஓய்வு ஊதியத்
திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வு ஊதியத்
திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்பாடத்தை
முதல் பாடமாக வைக்க வேண்டும் உள்ளிட்ட, 15 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர்
இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஜன.,
30, 31 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், மாவட்ட
தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம்
அறிவித்திருந்தனர். கரூர் மாவட்டம் சார்பில், கரூர்
தாலுகா அலுவலகம் முன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன்
தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில்
ஈடுபட்ட, 425 பேரை போலீசார் கைது செய்து, பஸ்
ஸ்டாண்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க
வைக்கப்பட்டு, மாலையில் விடுவித்தனர். இதில்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழகம் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.