Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, June 13, 2015

ஐஎஃப்எஸ் அதிகாரியானார் பார்வையற்ற முதல் பெண்: சென்னையைச் சேர்ந்தவர்

"ஊனம் என்பது உடலில் அல்ல; அது மனத்தைப் பொருத்த விஷயம்' என்பதை, தனது அயராத உழைப்பால் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் ஐ.எஃப்.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்றதன் மூலம் நிரூபித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெனோ ஜெஃபைன் (25). இதற்கான உத்தரவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் மின்னஞ்சலில் வெள்ளிக்கிழமை பெற்றதாக அவர் தெரிவித்தார்.
 தமிழகத்தின் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் என்.எல். சார்லஸ். இவரது மனைவி மேரி. இவர்களது மகள் பெனோ ஜெஃபைன். பிறவியிலேயே பார்வையற்ற இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்வையற்றவருக்கான லிட்டில் ஃபிளவர் பள்ளியில் பிரெய்லி முறையில் பயின்றார்.
 அதன்பிறகு, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், அதே பிரிவில் முதுகலைப் படிப்பை லயோலா கல்லூரியில் பயின்றார். அதன்பிறகு, திருவள்ளூரில் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். மேலும், ஆங்கிலத்தில் முனைவர் பட்டத்திற்கும் படித்து வந்தார்.
 இந்நிலையில், இளங்கலைப் படிப்பைப் படித்த போது இவருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸஸ் தேர்வில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டது. அத்தேர்வை எழுதுமாறு இவரை பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் ஊக்குவித்தனர்.
 இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் இவர் பிரெய்லி முறையில் தேர்வெழுதினார். 2014, ஜூன் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 343-ஆம் இடம் பெற்றார். இதையடுத்து, இவருக்கு மத்திய வெளியுறவுத் துறையில் உதவிச் செயலர் அந்தஸ்தில் ஐ.எஃப்.எஸ். அதிகாரி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெள்ளிக்கிழமை இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 
 இதுகுறித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது பெனோ ஜெஃபைன் "தினமணி' நிருபரிடம் கூறியதாவது: யுபிஎஸ்சி தேர்வில் எனக்கு ஐ.எஃப்.எஸ். பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம், மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெற்றது. அகில இந்திய அளவில் முதல் முறையாக பார்வையற்றோர் பிரிவில் நான் இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை எட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, ஜித்தேந்தர் சிங், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சந்திரலேகா, மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தி, தமிழக பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீநிவாஸன், மகாராஷ்டிர எம்.பி. கோபால் ஷெட்டி மற்றும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாôரிகள், பெற்றோர், நண்பர்கள் ஆகியோர் பெரும் உதவியாக இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பெனோ ஜெஃபைன்.