Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, June 02, 2015

மாகி நூடுல்ஸ் விவகாரம்: அனைத்து மாநிலங்களிலும் சோதனைக்கு மத்திய அரசு உத்தரவு


மாகி நூடுல்ஸில் அபாயகரமான அளவில் ரசாயன கலப்பு இருப்பதாக எழுந்துள்ள கேள்விகளை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரசேத்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு நிர்வாக அமைப்பு, நூடுல்ஸின் சாம்பிள்களை சேகரித்து ஆய்வு செய்தபோது, மோனோசோடியம் குளூடாமேட் என்ற உப்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கக் கூடியது என்று தெரிவித்தது.
இதனை அடுத்து மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளுக்குத் தடை விதிக்க தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பெற்று சோதனைக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, "இது தொடர்பாக விசாரிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்துக்கு அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுவிட்டது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது.
அடுத்த 2 அல்லது 3 நாட்களில் சோதனையின் விவரங்கள் தெரியவரும். விதிமீறல் குறித்து தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை
இதனிடையே நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,
"விளம்பரங்கள் மூலம் தவறான பொருட்களுக்கு வழிகாட்டியது நிரூபிக்கப்பட்டால் தொடர்புடைய விளம்பர மாடல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நுகர்வோர் விவகார செயலாளர் குருச்சரன் தெரிவித்தார்.
ஏற்கெனவே உத்தரப் பிரதேச அரசின் வழிகாட்டுதலின்படி, நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மீது அம்மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.