Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, June 20, 2015

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதல் 10 இடங்களில் மாணவர்களே ஆதிக்கம்

பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களை இந்த முறை மாணவர்களே பிடித்துள்ளனர். இவர்களில் முதலிடம் பெற்ற கோவை மாணவர் கீர்த்தி பாலன், பி.இ. மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.
 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவர்களில் 7 பேர் மருத்துவப் படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். மற்ற மூவரும் பிளஸ் 2-வில் உயிரியல் அல்லாமல் கணினி அறிவியலை 4-ஆவது பாடமாக எடுத்துப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 பொறியியல் தரவரிசைப் பட்டியல் விவரம் மாணவர்களின் பார்வைக்காக www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோவை மாவட்டம்- சூலூரைச் சேர்ந்த கீர்த்தி பாலன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 
 பிளஸ் 2-வில் கணினி அறிவியல் பிரிவில் படித்த இவர் பொதுத் தேர்வில் 1200-க்கு 1185 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்போது பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்து படிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். 
 இதுகுறித்து அவர் கூறுகையில், ""பொறியியல் படிக்க வேண்டும், அதிலும் மெக்கானிக்கல் பிரிவில் சேர வேண்டும் என்பது எனது இலக்கு. இதற்காகவே குடும்பத்தினரின் அனுமதியோடு பிளஸ் 2-வில் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்து படித்தேன். இப்போது எனது லட்சியம் நிறைவேறியுள்ளது'' என்றார்.
 இவருக்கு அடுத்தபடியாக தருமபுரியைச் சேர்ந்த கே. நிஷாந்த்ராஜன், திருச்சியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன், நாமக்கல் மாவட்டம்- பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஜி.நிவாஷ், சென்னை- ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணகுமார், திருப்பூர் மாவட்டம்- அவிநாசியைச் சேர்ந்த சி.கிரிதரன், விழுப்புரம் மாவட்டம்- உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த பி. பிரவீண்குமார், ஈரோடு மாவட்டம்- பவானியைச் சேர்ந்த பி.மோனிஷ், எம்.மோகன்குமார், எலவமலையைச் சேர்ந்த எஸ்.இ.விக்னேஷ்வரன் ஆகியோர் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.
 இவர்களில் நிஷாந்த்ராஜன், முகேஷ் கண்ணன், நிவாஷ், சரவணக்குமார், பிரவீண்குமார், மோனிஷ், மோகன்குமார் ஆகியோர் மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேரப் போவதாகத் தெரிவித்தனர்.
 பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1185 மதிப்பெண்கள் பெற்ற சி.கிரிதரன் பொறியியல் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பி.இ. முடித்ததும் குடிமைப் பணி தேர்வெழுதி ஐஏஎஸ் அதிகாரி ஆவதே தனது லட்சியம் என்று அவர் தெரிவித்தார்.
 முதல் தலைமுறை மாணவரான விக்னேஷ்வரன் பொறியியலில் இசிஇ பிரிவைத் தேர்வு செய்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1190 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
தொழில் பிரிவு: பிளஸ் 2 தொழில் பிரிவின் கீழ் படித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், கோவை- காரமடையைச் சேர்ந்த என்.மனோஜ் முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம்- குமாரபாளையத்தைச் சேர்ந்த ஜே.விஷ்ணு இரண்டாம் இடத்தையும், சத்தியமங்கலம் தாலுகா, சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.தினேஷ்குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 23 பேர் 200-க்கு 200
 பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 23 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
 இதற்கு அடுத்ததாக, ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணிலும் 600 முதல் 1000 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் பிரபல கல்லூரிகளில் முன்னணி பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய இம்முறை கடும் போட்டி நிலவ வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.